ஆட்டோ, காரை தொடர்ந்து இ-பைக் டாக்சி சேவையை தொடங்கிய ஓலா.. இவ்ளோ ரேட் கம்மியா! எந்த நகரத்தில் தெரியுமா?
ஓலா கால் டாக்சி சேவை நிறுவனம் இந்தியாவின் மேலும் இரண்டு புதிய நகரங்களில் தன்னுடைய இ-பைக் டாக்சி சேவையைத் தொடங்கி இருக்கின்றது. ஐந்து கிமீட்டருக்கு வெறும் 25 ரூபாய் மட்டுமே என கட்டணம் அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கால் டாக்சி (Call Taxi) சேவை நிறுவனமாக கால் தடம் பதித்து முன்னணி எலெக்ட்ரிக் டூ-வீலர் (Electric Two Wheeler) நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது ஓலா (Ola). ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) எனும் பெயரிலேயே அது தன்னுடைய மின்சார வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின்கீழ் ஓலா எஸ்1 ப்ரோ (Ola S1 Pro), ஓலா எஸ்1 ஏர் (Ola S1 Air) மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் பிளஸ் (Ola S1 X+) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றுடன் வெகு விரைவில் மின்சார பைக்குகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
இந்த நிலையிலேயே ஓலா நிறுவனம், இ-பைக் டாக்சி எனும் சேவையை இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, மின்சார இருசக்கர வாகனங்களைக் கொண்டு இயங்கும் பைக் டாக்சி சேவையை ஓலா இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. முதல் கட்டமாக இந்த சேவை இரண்டு நகரங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது.
டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு நகரங்களில் மட்டுமே ஓலாவின் எலெக்ட்ரிக் பைக் டாக்சி சேவை தொடங்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக வேலையில்லா திண்டாட்டம் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், ஓலா நிறுவனம் தன்னுடைய இந்த இ-பைக் டாக்சி சேவை வாயிலாக ஒரு பில்லியன் மக்கள்களுக்கு சேவை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே ஓலாவின் இ-பைக் டாக்சி பெங்களுருவில் செயல்பாட்டில் இருக்கின்றது. இங்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய வரவேற்பை அடுத்தே டெல்லி மற்றும் ஹைதராபாத்தில் தொடங்கி இருக்கின்றது ஓலா. சுமார் பத்தாயிரம் வாகனங்களை அடுத்த இரண்டு மாதங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சேவையில் ஈடுபடுத்த இருப்பதாகவும் ஓலா அறிவித்து இருக்கின்றது.
இவ்வாறு செய்யும் எனில் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் இ-வாகனங்களை டாக்சி சேவையில் கொண்டிருக்கும் மிகப் பெரிய நிறுவனமாக ஓலா இருக்கும். மிகவும் குறைவான கட்டணத்தில் இந்த சேவையை வழங்க ஓலா திட்டமிட்டுள்ளது. இதன்படி 5 கிமீட்டருக்கே வெறும் 25 ரூபாய் மட்டுமே அது கட்டணமாக வசூலிக்க இருக்கின்றது.
இதேபோல், 10 கிமீட்டருக்கு 50 ரூபாயும், 15 கிமீட்டருக்கு 75 ரூபாயும் அது கட்டணமாக வசூலிக்க இருக்கின்றது. ஆகையால், ஓலாவின் இ-பைக் டாக்சி சேவைக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, ஆட்டோ மற்றும் பைக்கைக் காட்டிலும் மிக அதிக அளவில் இதற்கு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் மின்சார இருசக்கர வாகன பிரிவை இந்த நிறுவனம் ஒரு கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. இதைப் போலவே டாக்சி பிரிவும் இதுவே முன்னணி நிறுவனமாக இருக்கின்றது. இந்த நிலைக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையிலேயே தற்போது இ-டாக்சி பிரிவில் வலவூட்டும் முயற்சியில் ஓலா களமிறங்கி இருக்கின்றது.
ஓலா இந்த சேவையை தொடங்கி இருப்பதனால் எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் விற்பனை இப்போது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பலமடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெட்ரோல் டூ-வீலரைக் காட்டிலும் அதிக லாபத்தை இ-வாகனங்கள் வழங்கும் என்பதால் தற்போது பெட்ரோல் டூ-வீலரை பைக் டாக்சி சேவையில் ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த பைக்குகளை கைவிட்டு இ-வாகனங்களை வாங்கி சேவைக்கு உட்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.