குடுத்தோட போறதுக்கு கார் தேடுறீங்களா? இந்த காரை கொஞ்சம் பாருங்க உடனே வாங்கிடுவீங்க!
கார் வாங்கும் பலர் தங்கள் குடும்பத்துடன் வெளியூர்களுக்கு பயணிப்பதையே முக்கியமான நோக்கமாகக் கொண்டு கார்களை வாங்குகின்றனர். வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரால் பொது போக்குவரத்தில் செல்ல முடியாத காரணத்தால் சொந்தமாக கார் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு பலர் வருகின்றனர். இதனால் இந்தியாவில் குடும்பத்தினர் பயணிக்கும் வகையிலான கார்களின் விற்பனை அதிகமாக இருந்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கார் வாங்க வேண்டும் என்றால் நல்ல மைலேஜ் உள்ள கார்களை தான் இந்திய குடும்பத்தினர் அதிகம் தேர்வு செய்வார்கள். அதுதான் குறைவான செலவில் பயணம் செய்ய வசதியாக இருக்கும் என்பதால் இப்படியான கார்களை தேர்வு செய்து வந்தார்கள். நீண்ட ஆண்டுகளாக இந்தியாவில் அதிக மைலேஜ் தரும் கார்களின் விற்பனை தான் சிறப்பாக இருந்து வந்தது. ஆனால் இன்று நிலைமை மாறிக்கொண்டிருக்கிறது.
இன்று மக்கள் மத்தியில் பாதுகாப்பான கார்களை வாங்க வேண்டும் என்ற எண்ணம் உதயமாகிவிட்டது. சாலையில் நடக்கும் விபத்துக்கள் குறித்த செய்திகளை பார்க்கும்போது மக்கள் மத்தியில் கார் வாங்கும் போது அது பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய விரும்புகின்றனர். இதனால் அந்த கார் கிராஷ் டெஸ்ட் சோதனையில் எத்தனை ஸ்டார்களை பெற்று உள்ளது என்பது இன்றைக்கு கார்களை விற்பனை செய்யும் மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது.
அதே நேரம் இன்று இந்தியாவில் மிடில் கிளாஸ் மக்களுக்கு ரூபாய் 6 முதல் 7 லட்சம் தான் கார் வாங்குவதற்கான பட்ஜெட்டாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் தான் அவர்கள் கார் வாங்கினால் அவர்கள் குடும்பத்தை எந்த பிரச்சினையும் இல்லாமல் கொண்டு செல்ல முடியும் என கருதுகின்றனர். அதனால் இந்த பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் மாருதி நிறுவனத்தின் கார்களையே தேர்வு செய்கின்றனர்.
இன்றளவும் இந்த பட்ஜெட்டில் அதிகமாக விற்பனையாகும் கார்களில் பாதுகாப்பு ரேட்டிங் என்பது குறைவாகவே இருக்கிறது. முக்கியமாக மாருதி நிறுவனத்தின் வேகன்ஆர் கார் தான் இந்த பட்ஜெட்டில் அதிகமாக விற்பனையாகும் காராக இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு என்ற விஷயம் வரும்போது இந்த பட்ஜெட்டில் மாருதி நிறுவனத்தின் கார்கள் சிறப்பான பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற கார்களாக இல்லை.
வேகன்ஆர் காரை பொறுத்தவரை பாதுகாப்பு ரேட்டிங்கில் குளோபல் என்கேப் டெஸ்ட் சோதனையில் வெறும் ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்ற காராக இருக்கிறது. மொத்தம் வழங்கப்படும் ஐந்து ஸ்டாரில் வெறும் ஒரு ஸ்டாரை மட்டும் பெற்ற கார் மிகவும் பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த காராகவே பார்க்க முடியும். பெரியவர்களுக்கும் சரி குழந்தைகளுக்கும் சரி இந்த கார் பாதுகாப்பு அம்சம் குறைந்த காராக இருக்கிறது.
இந்த கார் மார்க்கெட்டில் ரூ5.54 லட்சம் முதல் ரூ7.42 லட்சம் என்ற விலையில் விற்பனை ஆகிறது. கிட்டத்தட்ட இதே விலையில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஒரு காரும் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. அதைப்பற்றி தான் நாம் இங்கே உங்களுக்கு சொல்ல வந்துள்ளோம். டாடா நிறுவனத்தின் டியாகோ கார் குடும்பங்கள் பயணிக்கும் ஏற்ற காராக இருக்கிறது.இந்த கார் மார்க்கெட்டில் ரூ5.60 லட்சம் முதல் ரூபாய் 8.20 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.
இந்த காரில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன இதன் இன்ஜினை பொறுத்தவரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது 86 பிஎச்பி பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் கொண்ட இன்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் சிஎன்ஜி ஆப்ஷன் உடன் விற்பனைக்கு வருகிறது. இந்த இஞ்சின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 5 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதன் மைலேஜ் பொறுத்தவரை பெட்ரோல் இன்ஜின் கார் லிட்டருக்கு 19.0 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. அதுவே சிஎன்ஜி கார் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.49 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது. இந்த காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ரியர் பார்க்கிங் சென்சார், முன்பக்க ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ஆட்டோமேட்டிக் டோர் லாக், ரிவர்ஸ் கேமரா உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.