ஹீரோவின் கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட 2 இன் 1 வாகனம்.. ஸ்கூட்டர் அல்லது ஆட்டோ இரண்டாகவும் இது பயன்படும்!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்திற்கு சொந்தமான ஓர் ஸ்டார்ட்-அப் (Start up) நிறுவனமே சர்ஜ் (Surge). இந்த நிறுவனமே 2 இன்1 பயன்பாட்டு வசதிக் கொண்ட வாகனத்தை தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. மெய்டன் எஸ்32 (Maiden S32) எனும் வாகனத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.
இந்த வாகனத்தை தேவைப்பட்டால் ஸ்கூட்டராகவோ அல்லது சரக்குகளை ஏற்றிச் செல்லும் ஆட்டாவாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதற்கான பிரத்யேக வசதிகளை மெய்டன் எஸ்32-வில் சர்ஜ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஓர் இந்திய நிறுவனம் இத்தகைய வாகனத்தை உருவாக்கி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
வெளிநாடுகள் சிலவற்றில் ஏற்கனவே இதுமாதிரியான வாகனங்கள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஆனால், இந்தியர்களின் கைகளுக்கு இது இன்னும் வரவில்லை. இந்த குறையையே விரைவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறைவேற்றி வைக்க இருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் இப்போது வரை டூ-வீலர் உற்பத்தியை மட்டுமே முக்கிய உற்பத்தியாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே அது மூன்று சக்கர கார்கோ வாகன உற்பத்தியிலும் தன்னுடைய சர்ஜ் பிராண்ட் வாயிலாக ஈடுபட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த வாகனத்தின் வாயிலாக அதிக லாபத்தை பெற்றுக் கொள்ளும் விதமாக பெரிய பின் பக்க பாடியை நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
மேலும், இது ஓர் எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இளம் தொழில்முனைவோரைக் கருத்தில் கொண்டே இந்த வாகனத்தை சர்ஜ் தயார் செய்திருக்கின்றது. மேலும், இதனை ஸ்கூட்டர் அல்லது மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொள்வதும் மிக சுலபமானதாகும். உரிமையாளராலேயே இதை செய்துக் கொள்ள முடியும்.
அத்துடன், இந்த வாகனத்தை ஸ்கூட்டர் அல்லது மூன்று சக்கர வாகனமாக மாற்றிக் கொள்ள வெறும் 3 நிமிடங்களே போதுமானது ஆகும். லோடு வாகனமாக பயன்படுத்தும்போது, அதாவது, மூன்று சக்கர வாகனமாக பயன்படுத்தும்போது அதிக பிரீமியமான டிராவலை அதன் பயனாளிகளால் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்காக ஏகப்பட்ட வசதிகளை இந்த வாகனத்தில் சர்ஜ் வழங்கி இருக்கின்றது. உதாரணமாக காரில் பயணிப்பதைப் போன்ற அனுபவத்தை வழங்கும் விதமான அம்சங்கள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மிருதுவான இருக்கை, சூப்பரான ஹேண்ட்லிங் அம்சங்கள் என பலதரப்பட்ட அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
விண்ட் ஸ்கிரீன், விண்ட் ஸ்கிரீன் வைப்பர் உள்ளிட்டவையும் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. மழைக் காலத்தில் பாதுகாப்பான ரைடை அனுபவிப்பதற்காக சாஃப்ட் டோர்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இருசக்கர வாகனமாக பயன்படுத்துவதற்கு 3 kW திறன் கொண்ட மோட்டாரும், மூன்று சக்கர வாகனமாக பயன்படுத்துவதற்கு 10 kW திறன் கொண்ட மோட்டாரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 13.4 பிஎச்பி பவரையும், 2 வீலருக்கான மோட்டார் 4 பிஎச்பி பவரையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதேபோல் வெவ்வேறு வித்தியாசமான பேட்டரி பேக்கே இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, டூ-வீலருக்காக 3.5 kWh பேட்டரி பேக்கும், 3 வீலருக்கு 11 kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
கார்கோ வாகனமாக பயன்படுத்தும்போது சுமார் 500 கிலோ வரையிலான சரக்குகளை அந்த வாகனத்தில் எடுத்துச் செல்ல முடியும். இந்த வாகனம் விற்பனைக்கு வரும்போது மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது. அதாவது, லோடு ஆட்டோ, பயணிகள் ஆட்டோ மற்றும் கூண்டு வைத்த வாகனம் ஆகிய தேர்வுகளிலேயே அது விற்பனைக்கு வர இருக்கின்றது.