ரிங்கு சிங் சொன்னது உண்மை தான்.. இப்போதும் சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை.. வியப்பில் ரசிகர்கள்!

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங், இப்போதும் சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியை தொடர்ந்து வரும் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய ஃபினிஷராக உருவாகியுள்ளார் ரிங்கு சிங். கடந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்களை விளாசிய பின், ரிங்கு சிங்கின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது. உடனடியாக இந்திய டி20 அணியில் அறிமுகம் செய்யப்பட்ட ரிங்கு சிங், இந்திய அணியின் ஃபினிஷராக உருவெடுத்தார்.

அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆஃப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகளுக்கு எதிரான டி20 போட்டிகளில் ரிங்கு சிங் ஆடிய ஆட்டம் அவரை இந்திய அணியின் நிரந்தர வீரராக மாற்றியது. அதிலும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மாவுடன் இணைந்து 190 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பலருக்கும் வியப்பை அளித்தது.

இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரிங்கு சிங் 89.0 பேட்டிங் சராசரியுடன் 2 அரைசதம் உட்பட 356 ரன்களை குவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் இந்திய அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வீரர் ரிங்கு சிங்கை இந்தியாவின் புதிய தோனி என்று பாராட்டி இருந்தார். அதுமட்டுமல்லாமல் இந்திய ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிங்கு சிங், விரைவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்று பார்க்கப்படுகிறது.

ஏழ்மையான பின்னணியை கொண்ட ரிங்கு சிங், உச்சத்திற்கு வந்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. கேஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் தந்தை, ஆட்டோ ஓட்டும் சகோதரர் என்று ரிங்கு சிங்கின் குடும்ப பின்னணி சாதாரணமானது. கிரிக்கெட் போட்டியில் ஒருமுறை பைக் ஒன்றை பரிசாக வென்று ரிங்கு சிங் அதனை வீட்டிற்கு கொண்டு சென்ற போது, அதனை நிறுத்துவதற்கு கூட இடமில்லாத அளவிற்கு அவர் வீட்டின் சூழல் இருந்தது.

இதன்பின் குடும்பத்தின் பொருளாதார சூழல் ரிங்கு சிங்கின் வளர்ச்சியின் மூலம் சரி செய்யப்பட்டது. இருப்பினும் ரிங்கு சிங்கின் தந்தை தொடர்ந்து சிலிண்டர் டெலிவரியில் ஈடுபடுவதாக அவர் கூறியிருந்தார். இதுகுறித்து ரிங்கு சிங் பேசுகையில், என் தந்தையிடம் ஓய்வெடுக்கலாம் என்று அறிவுறுத்தினேன். ஆனாலும் அவர் தொடர்ந்து சிலிண்டர் டெலிவரி செய்து வருகிறார். அவரின் எண்ணங்களையும் புரிந்து கொள்கிறேன்.

வாழ்க்கை முழுக்க பணியாற்றிவிட்டு திடீரென ஓய்வெடுப்பது அவருக்கு சரியாக இல்லை. அதனால் அவர் பணியாற்றுவதை தடுக்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த நிலையில் ரிங்கு சிங்கின் தந்தை கான்சந்திர சிங், உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் பகுதிகளில் சிலிண்டர் டெலிவரி செய்யும் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *