`Secular, Socialist’ இல்லாமல் அரசியலமைப்பின் முன்னுரை – விவாதத்தை கிளப்பிய MyGovIndia பதிவு
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயில் பிரதிஷ்டை நடைபெற்ற அன்று, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும், பெரும்பான்மைவாத அரசியலுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை பக்கத்தைப் பதிவிட்டு, `இந்தியா என்பது மதசார்பற்ற நாடு’ என்பதை வலியுறுத்தினர்.
இத்தகைய சூழலில், நாட்டின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின், MyGovIndia எனும் அதிகாரபூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், பதிவிடப்பட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படம், தற்போது விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.
மத்திய அரசு பதிவிட்ட அரசியலமைப்பின் முன்னுரை
அதாவது, MyGovIndia பதிவிட்டிருக்கும் இந்திய அரசியலமைப்பின் முன்னுரை படத்தில், `மதச்சார்பற்ற (Secular), சோசலிஸ்ட் (Socialist)’ என்ற வார்த்தைகள் நீக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.க அரசு இவ்வாறு செய்வது இது முதல்முறையுமல்ல.
இதற்கு முன்னர், கடந்த ஆண்டு செப்டம்பரில் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டம் நடந்தபோது, நாடாளுமன்ற எம்.பி-க்களுக்கு இந்திய அரசியலமைப்பு பிரதி வழங்கப்பட்டது. அந்தப் பிரதியின் முன்னுரை பக்கத்திலும், மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகளை அரசு நீக்கியிருந்தது. அப்போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, பா.ஜ.க அரசு இதனை வேண்டுமென்றே செய்கிறது என்று கூறியிருந்தார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி – காங்கிரஸ்
இதற்கு விளக்கமளித்த மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால், “1950-ல் அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது முன்னுரை இவ்வாறுதான் இருந்தது. அதன்பிறகு 42-வது திருத்தும் கொண்டுவரப்பட்டு மதச்சார்பற்ற, சோசலிஸ்ட் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டது. எனவே, அசல் பிரதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு தற்போது கொடுக்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், மத்திய அரசு மீண்டும் இவ்வாறு செய்திருப்பது விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் இன்று! – சிறப்பு பகிர்வு