ஸ்டாலின் நம்பர் 1 முதலமைச்சர் தான்.. லிஸ்ட் போட்டு எடப்பாடி வைத்த ட்விஸ்ட்!
சென்னை: ஸ்டாலின் நம்பர் 1 முதலமைச்சர் தான், ஆனால் எதில் தெரியுமா எனக் கேட்டு ஒரு லிஸ்ட் வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
பத்திரிகையாளர் ஒருவர், காவல் துறையின் அலட்சியப் போக்கு காரணமாக மர்ம நபர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதனை ஒரு “சிறப்பு நிகழ்வாக” கருதி நிதி அளிப்பதாக, வினோதமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் ஸ்டாலின் அவர்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் இப்படியொரு விந்தையான, கேலிக்கூத்தான அறிக்கையை யாரும் வெளியிட்டதில்லை. அப்படிப்பட்ட அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்டாலின் அவர்கள், தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறையின் அலட்சியப் போக்கையும், தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையையும் ஒப்புக்கொள்ள மனமில்லாமல் தப்பித்துக்கொள்ள தனக்குத்தானே கண்டனம் வேறு தெரிவித்துக்கொள்கிறார்.
அவருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது, “ஸ்டாலின் அவர்களே, அது கண்ணாடி!”இதே கண்ணாடியைப் பார்த்துதான் தன்னைத்தானே நம்பர் 1 முதலமைச்சர் என்று சொல்லிக்கொள்கிறார் திரு. ஸ்டாலின் அவர்கள். அவரது இந்தக் கூற்றை இந்நூற்றாண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவையாகவே நான் கருதுகிறேன். அவர் எதில் எல்லாம் நம்பர் 1 என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த விழைகிறேன்.
திரு. ஸ்டாலின் அவர்கள்,
*கடன் வாங்குவதில் நம்பர் 1 முதலமைச்சர்;
*சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டில் நம்பர் 1 முதலமைச்சர்;
*தமிழகத்தின் மோசமான முதலமைச்சர்கள் பட்டியலில் முதன்மையான முதலமைச்சர்.
*இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் தேர்தல்களில் அதிகமாக தோல்வியுற்ற தொகுதிகள் பட்டியலிலும் நம்பர் 1 இடத்தைதான் பிடிக்கப்போகிறார்.
இனியும் இந்த பொம்மை முதலமைச்சரை நம்பி “எந்தப் பயனும் இல்லை” என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. அதனால், தமிழகக் காவல் துறை அதிகாரிகளிடம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்துகிறேன்.
*சட்டம்-ஒழுங்கு சீர்கெடும் வண்ணம் குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி உடனடியாகக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்;
*24 மணி நேரமும் காவல்துறை ரோந்துகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களுக்கான சிறப்பு “அம்மா பேட்ரோல்” (Amma Patrol) வாகனங்களை அதிகரித்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்;
*உதவி நாடி காவல் துறையை அணுகும் மக்களிடம், கவனத்துடன் அவர்களது பிரச்சனைகளைக் கேட்டறிந்து, எந்தவித தாமதமும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.