திருச்சி, ரமேஸ்வரம் விசிட்.. மோடி வந்தது அரசு பயணமா? தனிப்பட்டதா? செலவை ஏற்றது யார்? ஆர்டிஐ கேள்வி
சென்னை: பிரதமர் நரேந்திர கடந்த 20, 21 ஆகிய தேதிகளில் திருச்சி, ராமேஸ்வரம் கோவில்களில் தரிசனம் செய்தார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு இந்த பயணத்தை அவர் மேற்கொண்டார். இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் இந்த பயணம் தனிப்பட்டதா? அரசு முறையிலானது? செலவை ஏற்றது யார்? என்பது பற்றி அடுக்கடுக்காக ஆர்டிஐயிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக கடந்த 19ம் தேதி தமிழகம் வந்தார். சென்னையில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் திருச்சி, ராமேஸ்வர் கோவில்களுக்கு சென்றார்.
அதாவது கடந்த 20ம் தேதி பிரதமர் மோடி சென்னையில் இருந்து திருச்சி வந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். முன்னதாக அவர் 22 தீர்த்தங்களில் நீராடினார்.
பிறகு ஜனவரி 21ம் தேதி அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்ற பிரதமர் மோடி தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் தரிசனம் செய்தார். பிறகு அங்கிருந்து மதுரை வந்து விமானத்தில் டெல்லி சென்றார். அதன்பிறகு மறுநாளான ஜனவரி 22ல் பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்று 5 வயது பால ராமர் சிலையை திறந்து வைத்தார்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடியின் திருச்சி, ராமேஸ்வரம் சுற்றுப்பயணம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் துரைசாமி பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் டெல்லி பிரதமர் மோடியின் அலுவலக பொது தகவல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
பிரதமர் மோடி ஜனவரி 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் திருச்சி மற்றும் ராமேஸ்வரம் பயணம் செய்தார். பிரதமர் மோடியின் இந்த பயணம் என்பது தனிப்பட்ட முறையிலானதா? அல்லது அலுவல் ரீதியிலானதா? என்பதை தெரிவிக்க வேண்டும். தனிப்பட்ட முறையிலான பயணம் என்றால் பிரதமர் மோடி பயணித்த விமானம், ஹெலிகாப்டருக்கான செலவை மத்திய அரசு செய்ததா? அல்லது மாநில அரசு செய்ததா? என்பதை தெரிவிக்க வேண்டும்.
மேலும் தனிப்பட்ட முறையிலான பயணம் என்றால் அரசு வாகனங்களை எந்த சட்ட விதிகளின் கீழ் பிரதமர் மோடி பயன்படுத்தினார்?. அந்த விதிகளின் கீழ் சாதாரண மக்களும் கோவில்களுக்கு செல்ல இதுபோல் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியுமா? என்பதை விளக்க வேண்டும். இதுதவிர தனிப்பட்ட முறையிலான பயணம் என்றால் இந்த போக்குவரத்து செலவுக்கான கட்டணம் பிரதமர் மோடியிடம் வசூலிக்கப்படுமா? ஒருவேளை வசூலிக்கப்படாவிட்டால் அதற்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.