ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு.. ரத்த வெள்ளத்தில் மிதந்த குடும்பத்தினர்.. சிவகங்கையில் பயங்கர சம்பவம்
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்த மர்ம கும்பல் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாக அரிவாளால் வெட்டித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லு வழி கிராமத்தில் வசித்து வருபவர்கள் சின்னப்பன் – உபகாரமேரி தம்பதி. இவர்களது மகன் ஜேக்கப் பாரி கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜேக்கப்பின் மனைவி அரசி, தனது 12 வயது மகள் ஜெர்லின் மற்றும் 8 வயது மகன் ஜோபின் ஆகியோருடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சின்னப்பனின் வீட்டிற்குள் புகுந்துள்ளனர். அங்கு உறங்கி கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேரையும் அரிவாளால் வெட்டி கொடூரமாக தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் வெட்டுகாயம் விழுந்து ஐவரும் சுயநினைவை இழந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். சிறிது நேரத்தில் நினைவு திரும்பிய சிறுவன் ஜோபின், அருகில் உள்ளவருக்கு செல்போன் மூலம் தகவல் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பதறி அடித்து கொண்டு ஓடியவர்கள், வீடு புகுந்து பார்க்க ரத்த வெள்ளத்தில் அனைவரும் பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளனர். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு 5 பேரையும் மீட்டு காளையார் கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு சின்னப்பன், அரசி மற்றும் அவரது குழந்தைகள் இருவரையும் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். மோப்ப நாய்களை வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். கொலைவெறி சம்பவத்தில் ஈடுபட்டது யார்? எதற்காக தாக்குதல் நடந்தேறியது? உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதே போல் ஏற்கனவே முடுக்கூரணி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் நள்ளிரவில் வீடு புகுந்து உறங்கி கொண்டிருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அது தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தை அலறவிட்டுள்ளது.