‘இந்தியா’ கூட்டணியை இன்ச் இன்சாக கட்டி.. புல்டோசரில் இடிக்கும் நிதிஷ் குமார்! தொடரும் யு-டர்ன்கள்
டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரமாண்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார், அந்த கூட்டணியையே தகர்க்கும் வகையில் யூ டர்ன் அடித்து மீண்டும் பாஜகவுடன் சேர இருக்கிறார்.
மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சிகாலம் இன்னும் சில மாதங்களில் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மக்களவைத் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில் அதற்கான தயாரிப்பு பணிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இறங்கி இருக்கின்றன. 3 வது முறையாக மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமைத்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து அதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாஜகவை 2024 நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மாநாட்டுக் கட்சி என பாஜக கூட்டணியில் இல்லாத அனைத்து மாநில கட்சிகள், தேசிய கட்சிகளை இணைத்து ஒரே அணியாக தேர்தலை சந்திக்கும் முயற்சி நடைபெற்றது. இதனை முழு வீச்சில் முன்னெடுத்தவர் பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் மற்ற மாநிலக் கட்சித் தலைவர்கள், எதிர்க்கட்சிகளின் தலைவர்களை சந்திக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். பல்வேறு மாநிலங்களுக்கு சென்று எதிர்க்கட்சித் தலைவர்களை அவர் அடுத்தடுத்து சந்தித்தார். மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சரும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆகியோரை சந்தித்து பேசினார்.
சிவசேனா (உத்தவ்) கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான ஹேமந்த் சோரன், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து பேசினார் நிதீஷ் குமார். அதே போன்று தமிழ்நாடு வந்த அவர் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். அந்த நட்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருவாரூரில் கருணாநிதி கோட்டத்தை திறந்து வைக்க நிதிஷ் குமார் அழைக்கப்பட்டார்.
இவரது முயற்சியின் பலனாகவே எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதன் பின்னர் பெங்களூரில் நடைபெற்ற கூட்டத்தில்தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயரிடப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருக்க ஒரே கூட்டணியில் போட்டியிடுவது என இந்த கட்சிகள் முடிவெடுத்து மும்பையிலும் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டின. இதன் பின்னர் நடைபெற்ற 5 மாநிலத் தேர்தலில் காங்கிரஸின் தோல்வி இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை குலைத்தது.