அக்கா.. அக்கா.. என பேசி பக்கா பிளான்… இன்ஸ்டா புகழ் ஆசிரியை படுகொலை.. திடுக்கிடும் தகவல்

கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் புகழடைந்த தனியார் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞர் ஒருவர் சிக்கியுள்ளார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம், பாண்டவபூர் மாணிக்யனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் 35 வயதான லோகேஷ், இவரது மனைவி தீபிகா. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார். தீபிகா மேலுகோட்டில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணியாற்றி வந்தார், இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாகி வந்தார். இன்ஸ்டாகிராமில் இவரது ரீல்ஸ்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி காலை, பள்ளிக்குச் சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் லோகேஷ், தீபிகாவை பல இடங்களிலும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, மேலுகோட் காவல் நிலையத்தில் இதுகுறித்து லோகேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வந்த நிலையில், இருதினங்களுக்கு முன் மேலுகோட் யோக நரசிம்ம சுவாமி கோவிலின் மலை அடிவாரத்தில் சாக்கு மூட்டையில் வைத்து பாதி புதைக்கப்பட்ட நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

உடனே அங்கு சென்ற போலீசார் பாதி அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு சோதனை செய்த போது, அது காணாமல் போன தீபிகா என்பது தெரியவந்தது. அவரை யாரோ கொலை செய்து, உடலை புதைத்திருப்பது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்தது தீபிகா ரீல்ஸ் வீடியோ எடுத்து வந்ததால், அதன்மூலம் பழக்கமானவர்கள் யாராவது கொலை செய்தனரா? என்ற, கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் மலை அடிவாரத்தில் தீபிகாவும், ஒரு இளைஞரும் சண்டை போடுவதை, கோவிலுக்கு வந்த சிலர், மொபைல் போனில் வீடியோ எடுத்து இருந்தனர்.

அந்த வீடியோவை, போலீசிடம் கொடுத்தனர். அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தியதில், தீபிகாவுடன் சண்டை போட்டது, மாணிக்யனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிதிஷ்கௌடா என்பது தெரியவந்தது. தீபிகாவின் குடும்பத்தினரும், நிதிஷ் மீது கொலை குற்றச்சாட்டு கூறி இருந்தனர். தீபிகாவிடம் கடைசியாக மொபைல் போனில் பேசியது அவர்தான் என்பதும் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை பிடிக்க, இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து விஜயநகரா ஹொஸ்பேட்டில் நிதிஷை, மேலுகோட் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

முதலில் தீபிகாவை கொல்லவில்லை என்று கூறியவர், போலீசாரின் கிடுக்கு பிடி விசாரணையின் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தீபிகாவும், நிதிஷும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அக்கா, தம்பி போன்று பழகி வந்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையில், ஏதாவது தவறான உறவு இருக்கலாம் என்று, குடும்பத்தினர் சந்தேகித்தனர். நிதிஷுடன் பேசுவதைத் தவிர்க்கும்படி, தீபிகாவுக்கு அறிவுரை கூறினர். இதனால் நிதிஷுடன் பேசுவதை, அவர் தவிர்க்க ஆரம்பித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நிதிஷ்கௌடா, தன்னுடன் பேசுமாறு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதற்கு சம்மதிக்காததால் தீபிகா மீது கடும் ஆத்திரமடைந்த நிதிஷ் கௌடா அவரை கொன்று விடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி நிதிஷுக்கு பிறந்தநாள் என்பதால் தீபிகாவிடம் செல்போனில் பேசியவர், உங்களை பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார். பிறந்தநாள் என்பதால் நிதிஷுக்கு சட்டை எடுத்துக் கொண்டு, அவரை சந்திக்க, யோக நரசிம்ம சுவாமி கோவில், மலை அடிவாரத்திற்கு தீபிகா சென்றுள்ளார்.

அங்கு வைத்து நிதிஷுக்கும், தீபிகாவுக்கும் இடையில், தகராறு ஏற்பட்டு உள்ளது. ஒருகட்டத்தில் நிதிஷ், தீபிகா கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் சாக்கு மூட்டையில் உடலை திணித்து ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில், புதைத்துவிட்டு தப்பி உள்ளார். தீபிகாவை காணவில்லை என்று கணவரும், பெற்றோரும் தேடியபோது, தீபிகாவின் தந்தைக்கு, நிதிஷ் அடிக்கடி போன் செய்து, அக்கா வந்து விட்டாரா?’ என்று கேட்டு நாடகம் ஆடியதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. நிதிஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *