நிலவொளி மின்னொளியில் ஒளிர்ந்த தெப்பம்! – ஜொலித்தபடி அருள்பாலித்த மீனாட்சியம்மன்-சுந்தரேஸ்வரர்!

கோயில் நகரமாம் மதுரையில் ஆண்டின் அனைத்து மாதங்களிலும் திருவிழா கொண்டாடும் திருக்கோயில் மீனாட்சி அம்மன் திருக்கோயில்.

அதிலும் குறிப்பாக தை மாதம் நடைபெறும் தெப்பத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. அந்த வகையில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா நேற்று விமர்சையாக நடந்தது.

மீனாட்சியம்மன்- சுந்தரேஸ்வரர்

தெப்பத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தெப்பம் முட்டுத்தளுதல் நிகழ்ச்சியும், சிந்தாமணியில் கதிரறுப்புத் திருவிழாவும் 24-ம் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தெப்பத் திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

தெப்பத்திருவிழாவுக்காக நேற்று அதிகாலை மீனாட்சியம்மன் வெள்ளி அவுதா தொட்டிலிலும், சுந்தரேசுவரர் பிரியா விடையுடன் வெள்ளி சிம்மாசனத்திலும் எழுந்தருளி கோயிலிருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மீனாட்சியம்மனும், சுவாமியும் பஞ்ச மூர்த்திகளுடன் தெப்பக்குளம் அருகில் உள்ள மரகதவள்ளி முத்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

தெப்பத்திருவிழா

அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பக்தர்கள் வடம் பிடிக்க வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மிதவையில் மீனாட்சியம்மனும் சொக்கநாதரும் மூன்று முறை வலம் வந்தனர்.

தெப்பத்திருவிழா முடிந்ததும் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரரும் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுக் கோயிலை வந்தடைந்தனர்.

இந்த விழாவால் தெப்பக்குளம் பகுதியே பௌர்ணமி நிலவு வெளிச்சத்தில் ஜொலித்தது. இன்னொரு பக்கம் பிரமாண்ட மின்விளக்குகளால் தெப்பமும் அப்பகுதியும் கூடுதலாக ஒளிர்ந்தது.

ஒளிவெள்ளத்தில் சப்பரம் வலம் வரும் காட்சியை பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். இந்தத் திருவிழாவைக் காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்து இந்த அற்புத விழாவை கண்டுகளித்து மீனாட்சியம்மனையும், சுவாமியையும் வணங்கினர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *