திமுக எம்ல்ஏ மகன், மருமகள் சிறையில் அடைப்பு.. ஆந்திரா தப்பி செல்ல முயன்றவர்களை போலீசார் மடக்கி பிடித்தது எப்படி?

பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏவின் மகன் மற்றும் மருமகள் இருவரையும் சென்னை புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன். இவர், திருவான்மியூர் சவுத் அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மனைவி மெர்லினாவுடன் வசித்து வந்தார். இவரது வீட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது இளம்பெண், 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

அந்த பெண்ணை மெர்லினாவும், அவரது கணவரும் தாக்கி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. தீயினால் சுட்டும், தலை முடியை வெட்டியும் கொடுமைப்படுத்தியதாக அப்பெண் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்தார். பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு சென்ற அந்த பெண் தனது அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். உடலில் அடிப்பட்ட மற்றும் தீயினால் சுடப்பட்ட காயங்கள் இருந்ததால் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தாய் அழைத்து சென்றுள்ளார். அதன் பின்னரே இந்த சம்பவம் வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே, இது குறித்து தனக்கும், தனது மகனுக்கும் சம்மந்தம் இல்லை என்று திமுக எம்எல்ஏ கருணாநிதி தெரிவித்திருந்தார். இதனை அடுத்து எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் கடந்த 18-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கைதாகும் நிலையில் இருந்ததால் ஆண்ட்ரோ மதிவாணன், மெர்லினா இருவரும் தலைமறைவாகினர். நடந்தது என்ன என புரிந்து கொள்ளாமல் தவறாக பேச வேண்டாம் என மருமகள் மர்லினா ஆண்டோ ஆடியோவில் விளக்கம் அளித்திருந்தார். இது அபாண்டமான குற்றச்சாட்டு என மறுத்த அவர், அந்த பெண்ணை தன் வீட்டில் ஒரு பெண்ணாக மட்டுமே பார்த்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கணவன், மனைவியை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்போதுதான் அவர்கள் ஆந்திராவுக்கு காரில் செல்வது குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. உடனே தனிப்படை போலீசார் ஆந்திரா – தமிழ்நாடு எல்லைகளில் சோதனையை பலப்படுத்தினர். உள்ளூர் காவல்நிலையத்திற்கு அலர்ட் கொடுத்து தேடுதலில் ஈடுபட்டனர். அதில் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் ஆண்ட்ரோ மதிவாணன், அவரது மனைவி மெர்லினா இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை சென்னை அழைத்து வந்த போலீசார் இன்று அதிகாலையில் எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள நீதிபதி இல்லத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு விவரங்களை விசாரித்த நீதிபதி, இருவரையும் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து பலத்த பாதுகாப்போடு இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *