மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க நிதிஷ் குமார் திட்டம் என தகவல்.. காங்கிரஸ் ரியாக்ஷன் என்ன?
பீகார் மாநில அரசியலில் நடைபெறும் குழப்பம் தேசிய அளவிலான கூட்டணியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவர் நிதிஷ் குமார் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகாரில் ஆட்சியமைத்தார்.
இந்நிலையில், பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராகத் தொடர்ந்து பதவி வகித்து வந்தார். இந்த கூட்டணிக்குப் பின்னர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் லல்லு பிரசாத் யாதவ்வின் மகன் தேஜஸ்வி யாதவ் பீகாரின் துணை முதலமைச்சராகப் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கடந்த ஆண்டிலேயே கட்சிகள் கூட்டணி அமைக்கத் துவங்கி விட்டன. இதில் காங்கிரஸ் கூட்டணியான இந்தியா (I.N.D.I.A) கூட்டணி அமைவதில் நிதிஷ் குமார் முக்கிய பங்காற்றினார். இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணியில் பிளவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாரிசு அரசியல் குறித்து நிதிஷ் குமார் தெரிவித்த கருத்து காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தைக் குறிவைத்துக் கூறப்பட்டதாக எழுந்த சர்ச்சையே இந்த பிளவிற்குக் காரணமாக இருக்கும் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விளகி மீண்டும் பாஜக உடன் கூட்டணியில் இணைவதாகக் கூறப்பட்டு வருகிறது. மேலும், ஞாயிற்றுக் கிழமை நிதிஷ் குமார் பாஜக கூட்டணியிலான ஆட்சி அமைக்க உள்ளதாகவும், அது சம்பந்தமாக இன்று ஆளுநரைச் சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, “நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் தகவலை நிதிஷ் குமார் நிராகரிப்பார். இந்த குழப்பம் குறித்து விளக்க நான் நிதிஷ் குமாருக்கு கோரிக்கை விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு கிடைக்காத விரக்தியில் இருந்த நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகுவதாக கூறப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி, “அரசியலில் நிரந்தரமாக முடப்படும் கதவுகள் எதுவுமில்லை. தேவைகேற்ப திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
பீகார் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மோகன் பிரகாஷ், நிலவரம் குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்திக்கு தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய பீகார் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷகீல் அகமது கான், “நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகலாம் எனப் பல யூகங்கள் கூறுகின்றன. இந்நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற மனநிலையில் உள்ளோம்”எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இருந்து நிதிஷ் விலகி பாஜகவில் இணைந்தால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவும். எங்கள் கணிப்பின் படி எங்கள் கூட்டணியில் இருந்து ஜனதா தளம் விலகினால் ஆட்சி அமைக்கத் தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 8 எம்எல்ஏக்கள் குறைவாக இருப்பார்கள்.
ஜனதா தளத்தில் உள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் சிலர் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் தொடர்பில் இருப்பதால் தேவையான எண்ணிக்கை உறுப்பினர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், சபாநாயகரும் ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் கூட்டணி பலமாக உள்ளது. இது கூட்டணியில் இருந்து விலகும் முன் நிதிஷ் குமாருக்கு அழுத்தத்தைக் கொடுக்கும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடும் என அறிவித்திருந்தார். அதனை அடுத்து பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது இந்தியா கூட்டணி முறிவடைகிறது என அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பீகார் அரசியல் நிலவரம் இந்தியா கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.