அஜாக்கிரதையால் பறிபோன விக்கெட்.. அடுத்த ஓவரிலேயே ஆஃப் ஸ்டம்ப்பை பறக்கவிட்ட பும்ரா.. போராடும் இங்கிலாந்து
இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.
ஜனவரி 25ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து தடுமாற்றமாக விளையாடி 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பென்ஸ் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா மற்றும் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி 436 ரன்கள் குவித்து இங்கிலாந்தை விட 190 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 24, கில் 23, ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களில் அவுட்டானாலும் யசஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 80 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
மிரட்டிய பும்ரா:
அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் 86, ரவீந்திர ஜடேஜா 87, கேஎஸ் பரத் 41, அக்சர் படேல் 44 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதன் பின் பேட்டிங்கை துவங்கிய இங்கிலாந்துக்கு 45 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜாக் கிராவ்லி 31 ரன்களில் அஸ்வின் சுழலில் சிக்கினார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் பென் டுக்கெட் நிதானமாக விளையாடி இந்தியாவுக்கு சவாலை கொடுத்தார்.