தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு..? திமுகவுடன் பேச்சுவார்த்தை!
நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ’இந்தியா’ கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் தொகுதிப் பங்கீடு, கூட்டணி உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்த மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் ஆளும் திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் காங்கிரஸ் கட்சி தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை நாளை தொடங்க உள்ளது. இதற்காக முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார் ஆகியோர் நாளை சென்னை வர உள்ளனர். நாளை மாலை 3 மணியளவில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான தொகுதி பங்கீடு குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
டெல்லி மேலிட தலைவர்களுடன் இணைந்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, செல்வப்பெருந்தகை ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த செல்கின்றனர். அப்போது, காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதி குறித்த உத்தேச பட்டியலை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளில் முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையைத் தொடங்க உள்ளது.