புஜாராவை போல் ஆட தேவையில்லை.. சுப்மன் கில்லுக்கு அந்த பிரச்சனை இருக்கு.. மஞ்ச்ரேக்கர் அதிரடி கருத்து
ஐதராபாத் : ஸ்பின்னர்களை எதிர்கொள்ள தேவையான பேக் ஃபூட் ஆட்டத்தை சுப்மன் கில்லிடம் பார்க்கவே முடியவில்லை என்று இந்திய முன்னாள் வீரர் சஞ்ச்ய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் உள்ளது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 421 ரன்கள் குவித்துள்ள நிலையில், ஜடேஜா 81 ரன்களுடனும், அக்சர் படேல் 35 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெறும் என்று பார்க்கப்படுகிறது.
பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வருவதால், இங்கிலாந்து அணியின் பேஸ் பால் திட்டத்தை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. சூழலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணிக்கு ரசிகர்கள் பலரும் அட்வைஸ் கூறி வருகின்றனர்.
இதனிடையே இந்திய இளம் வீரர் சுப்மன் கில்லின் ஆட்டம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளாசிய சதத்திற்கு பின், கடந்த 11 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதிகபட்சமாகவே 36 ரன்களை தான் சேர்த்துள்ளார். அதிலும் சொந்த மண்ணில் ஆடியுள்ள 15 இன்னிங்ஸ்களில் 431 ரன்கள் மட்டும் சேர்த்ததோடு, அவரின் பேட்டிங் சராசரி 33.15ஆக மட்டுமே உள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், நேற்றைய ஆட்டத்தில் சுப்மன் கில் தேவையின்றி நிதான ஆட்டத்தை விளையாடினார். புஜாராவின் இடத்தில் களமிறங்கியதால், புஜாராவை போலவே விளையாட வேண்டும் என்றில்லை. ஆனால் அவர் எப்படி ஆட்டமிழந்தார் என்பது தான் கவலையளிக்கிறது. அவருக்குள் இருக்கும் நடுக்கத்தை போக்குவதற்காக, இன் ஃபீல்டில் கடந்து விளாச வேண்டும் என்று ஷாட்டை விளாசியுள்ளார்.
ஆனால் அது ஆன் ட்ரைவாக மாறி கேட்ச்சானது. ஸ்பின்னாகும் பிட்ச்களில் வீரர்கள் கொஞ்சம் பேக் ஃபூட்டில் விளையாட வேண்டும். அந்த வகையில் சுப்மன் கில் பேக் ஃபூட்டில் விளையாட நான் பார்க்கவே இல்லை. அவர் பேட்டை கூடுதல் அழுத்தத்துடன் பிடித்து கொண்டு டிஃபென்ஸ் ஆடுகிறார். அதனால் ராகுல் டிராவிட் அவருடன் கூடுதல் நேரம் செலவழிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.