சிதம்பரம் நடராஜர் ஆருத்ரா தரிசனம்.. கனகசபை தரிசனத்திற்கு தீட்சிதர்கள் மறுப்பு.. மீண்டும் சர்ச்சை
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் அறிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிவபெருமானின் பஞ்ச சபைகளில் ஆகாயத்தலமாக போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இங்கு ஆனி திருமஞ்சன திருவிழாவும் மார்கழி ஆருத்ர தரிசன விழாவும் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளைய தினம் தேரோட்டமும், நாளை மறுநாள் ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் ஆண்டாண்டு காலமாகப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏறி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தீட்சிதர்கள் அறிவித்தனர். இதனை அனைத்து தரப்பிலும் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கொரோனா காலம் முடிந்த பிறகும் அவர்கள் தீட்சிதர்களைத் தவிர மற்ற யாருக்கும் அனுமதி இல்லை என அறிவித்தனர்.
இதற்குக் கண்டனம் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு கோவிலில் கனகசபையில் ஏறி வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என அரசாணை வெளியிட்டது. இதனை ஒட்டி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கனகசபையில் தரிசனம் செய்து வந்தனர்.
கடந்த ஜூன் மாதம் ஆனித் திருமஞ்சனத் தேர் மற்றும் தரிசன விழாவையொட்டி தீட்சிதர்கள் நான்கு நாட்களுக்கு கனகசபையில் பொதுமக்கள் வழிபட அனுமதி இல்லை எனப் பதாகை வைத்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், பதாகைகளை அகற்றச் சென்ற இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடன், தீட்சிதர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தனர். பின்னர் காவல்துறையினர் பாதுகாப்புடன் கனகசபை ஏறி தரிசனம் செய்தனர் பக்தர்கள்.
இந்த நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன மகோத்சவம் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் பூஜை, வழிபாடு ஆகியவற்றில் எந்தவித இடையூறும் இன்றி பக்தர்கள் தரிசனம் செய்ய பாதுகாப்பு வழங்கக் கோரி பொது தீட்சிதர்கள் குழு சார்பில் காவல்துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கனகசபை மீது ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்த தடை கோரி ஹைகோர்ட்டில், தீட்சிதர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, ஆருத்ரா உற்சவத்தின்போது எவ்வித இடையூறும் இல்லாமல் பக்தர்கள் வழிபட பாதுகாப்பு வழங்குமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இந்த வழக்கை, கோவில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வு முன் பட்டியலிடும்படியும் உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன திருவிழாவை முன்னிட்டு 4 நாட்கள் கனகசபை தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தீட்சிதர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பக்தர்களை கனசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று பொது தீட்சிதர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். அதே நேரத்தில் 28ஆம் தேதி வரைக்கும் அனுமதிக்க முடியாது என்று தீட்சிதர்கள் தெரிவித்தனர்.
இதற்குக் காரணம் நடராஜர் கோவிலில் உற்சவரும் மூலவரும் அவராகவே இருக்கிறார். தேரோட்ட நாளிலும், ஆருத்ரா அபிஷேகம் செய்யப்படும் போதும் மூலவரே வீதி உலா வருவார். எனவே கனகசபையில் நடராஜர் இருக்க மாட்டார் என்று கூறியுள்ளனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும் என்பதால் 4 நாட்களுக்கு கனகசபை தரிசனத்திற்கு அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
கனகசபையில் இருந்து நடராஜர் தேரில் எழுந்தருளுவதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று தொடங்கப்படுவதால் இன்று முதல் 28ஆம் தேதி வரைக்கும் கனகசபை ஏறி வழிபட அனுமதிக்க முடியாது என்று பொது தீட்சிதர்கள் கூறியுள்ளனர். பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் மரபுப்படியே பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதிக்கவில்லை என்றும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் தீட்சிதர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் அரசாணைப்படி பக்தர்கள் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறி இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு பேச்சு வார்த்தைக்கு வந்தனர். ஆனால் அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்க பொது தீட்சிதர்கள் மறுத்து விட்டதால் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நேரத்தில் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என பொது தீட்சிதர்கள் விளம்பர பலகை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் பிரச்சினை செய்ய வேண்டும் என்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் அனுமதி கடிதம் கொடுத்துள்ளது.
அதிகமான கூட்டம் இருக்கும் காலங்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் தள்ளுமுள்ளு ஏற்படாமல் தவிர்க்கவும் கூட்ட நேரத்தில் மட்டும் கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய ஆலயத்தை நிர்வகிக்கும் தீட்சிதர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் ஆலயத்துக்கு சம்மந்தமில்லாத இந்து சமய அறநிலையத்துறை பாதுகாப்பு வேண்டுமென மனு கொடுத்துள்ளது வேடிக்கையாக உள்ளது.
இது முழுக்க முழுக்க அறநிலையத்துறைக்கு சிதம்பரம் நடராஜர் கோயில் மீது உள்ள வன்மமே காரணம். ஆகவே சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதனை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு காவல்துறையும், அரசும் ஒத்துழைக்க வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.