காவல் ஆணையர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை?
சென்னை மாநகர காவல்துறை அலுவலகம் சென்னை வேப்பேரி இ.வி.கே சம்பத் சாலையில் அமைந்துள்ளது. மாநகர காவல் ஆணையாளராக சங்கர் ஜிவால் தற்போது பதவியில் உள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசின் முக்கிய பிரமுகர்கள், திமுக அரசுக்கு உதவியாக இருக்கும் தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். அரசு அதிகாரிகளின் வீடுகளிலும் அவ்வப்போது அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர் காவல் ஆணையரின் அலுவலகத்தின் 4 வாயில்களும் மூடப்பட்டு அந்த பகுதிகளில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சமீபத்தில் ஓஷன் கட்டுமான நிறுவன அதிகாரி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. சென்னை மாநகர் காவல் ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது அவருடைய அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.