Fish Curry : கிராமத்து ருசியில் மணமணக்கும் நெய் மீன் குழம்பு! நாவில் எச்சில் ஊறவைக்க இப்டி செய்ங்க!
வறுத்து அரைக்க தேவையான பொருள்கள்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பூண்டு – 6 பல்
கொத்தமல்லி – 50 கிராம்
தக்காளி – 2
காய்ந்த மிளகாய் – 10
சின்ன வெங்காயம் – 10
தேவையான பொருள்கள்
நெய் மீன் – அரை கிலோ
உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நறுக்கிய சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 4 பல்
கடுகு – அரை ஸ்பூன்
வெந்தயம் – அரை ஸ்பூன்
நல்லெண்ணெய் – 100 கிராம்
செய்முறை
நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கொள்ளவேண்டும்.
மீனை நன்றாக கழுவி, சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிளகு, சீரகம், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போட்டு வாசம் வரும்வரை வறுத்து தனியாக எடுத்து ஆறவைத்து அரைத்து கொள்ளவேண்டும்.
பின்னர் அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி ஆற வைத்து அதனுடன் தேங்காயும் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம் போட்டு தாளித்து அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி ஊற வைத்த புளியை கரைத்து ஊற்றி அதனுடன் அரைத்த மசாலா கலவைகள் சேர்த்து குழம்புக்கு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு ஓரளவு கெட்டியானவுடன் மீன் சேர்த்து, 10 நிமிடம் அடுப்பை குறைத்து வைத்து பின் இறக்கினால் மிகவும் சுவையான நெய்மீன் குழம்பு ரெடி.
அருமையான சுவையில் நெய் மீன் குழம்பு இப்படி செய்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். எப்போதும் மீன் குழம்பை சாப்பிடுவதற்கு 4 முதல் 8 மணி நேரம் முன்னதாக செய்துகொள்ள வேண்டும். அப்போதுதான் சுவை தூக்கலாக இருக்கும். முதல் நாள் வைத்தும் செய்யலாம்.
நன்றி – தமிழ் சமையல் குறிப்புகள்
மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மீன் இந்த உலகிலேயே மிகச்சிறந்த உணவாக உள்ளது.
மீனில் ஊட்டச்சத்துக்கள், புரதச்சத்துக்கள் மற்றும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் உங்கள் உடல் மற்றும் மூளைக்கு மிகவும் அவசியமானவை.
மீனில் உயர்தர புரதச்சத்து, அயோடின் மற்றும் பல்வேறு வைட்டமின்களும், மினரல்களும் உள்ளன. கொழுப்பு நிறைந்த மீன்கள் மிகுந்த ஆரோக்கியமானவையாக கருதப்படுகிறது. சால்மன், டூனா, மெக்கரீல் உள்ளிட்டலையில் கொழுப்பு சார்ந்த ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உலகில் இளம் வயது மரணத்துக்கு பெரும்பாலான காரணமாக இருப்பது பக்கவாதம் மற்றும் மாரடைப்பு நோய்கள். மீன் இதயத்துக்கு இதமான உணவாக உள்ளது.
உடல் வளர்ச்சிக்கு ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் மிகவும் முக்கியமானவை. இவை மூளை மற்றும் கண் வளர்ச்சிக்கு உதவுகின்றன. எனவே கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.