உண்மையை சரிபார்ப்பவருக்கு சமூக நல்லிணக்க விருதா? வரிப்பணம் தான் வீணாகிறது – அண்ணாமலை எதிர்ப்பு!
இந்திய நாட்டின் 75ஆவது குடியரசு தின விழா நேற்று ஜனவரி 26ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நடந்த குடியரசு தினவிழாவின் போது உண்மையை சரிபார்ப்பவர் பத்திரிக்கையாளர் முகமது சுபைருக்கு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரூ.25,000 அடங்கிய பரிசு பெட்டகம் அடங்கிய கோட்டை அமீர் சமூக நல்லிணக்க விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சுபைர். இவர், AltNews என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனராக இருக்கிறார். இந்த நிலையில் தான் தனது இணையதளத்தின் மூலமாக புலம்பெயர்ந்த இந்தி பேசும் தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக செய்தி வெளியானதை ஆய்வு செய்து உண்மையில்லை என்று செய்தி வெளியிட்டார். இதன் காரணமாக அவருக்கு தமிழக அரசு இந்த விருதை வழங்கி கௌரவித்தது.
உண்மைத் தன்மையை சரிபார்த்த பிறகு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்ட வீடியோவில் உள்ள காட்சிகள் உண்மையில் தமிழகத்தில் நடைபெறவில்லை என்றும், இது தமிழகத்திற்கு எதிராக பரப்பப்பட்ட பொய்யான செய்திகள் என்றும் அவர் தனது ஆல்ட்நியூஸ் என்ற இணையதளத்தில் செய்தி வெளியிட்டார். மேலும், சாதி, மதம், இனம் மற்றும் மொழியால் ஏற்படும் வன்முறைகளை தடுக்க தமிழகத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று சுட்டிக் காட்டியிருந்தார்.
இதற்காக சுபைருக்கு தமிழக அரசு சமூக நல்லிணக்க விருது வழங்கி கௌரவித்தது. இந்த விருது வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எதிர்ப்பை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: உண்மையை சரிபார்ப்பவருக்கு விருது வழங்குவது, இந்த விருது பெற்ற அனைவரையும் அவமதிப்பதாகும்.
திமுகவின் இந்த தேர்வு நம்மை ஆச்சரியப்படுத்தவில்லை. ஏனென்றால், அவர்கள் தற்கொலை குண்டுவெடிப்பை சிலிண்டர் குண்டு வெடிப்பு என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். மேலும், அவர்கள் உண்மை சரிபார்ப்பவர்கள் என்ற போர்வையில் அரைகுறையாக உண்மையை கடைபிடிப்பவர்களிடம் புதிய விருப்பத்தை உருவாக்கியுள்ளனர். இதனால், வரிப்பணம் தான் வீணாகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.