அரிசி விலையை கேட்டால் வெங்காயம் நறுக்கியது போல் கண்ணீர் வருகிறது.. ஏன் இந்த நிலை..?
இந்திய மக்களின் முக்கியமான உணவாக இருக்கும் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமானிய மக்களின் பாக்கெட்டில் ஓட்டை விழுந்துள்ளது.
எப்படிப் பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வு மக்களைப் பாதிக்கிறதோ அதைவிடப் பெரிய பாதிப்பை அரிசி விலை ஏற்படுத்துகிறது.அரிசி என்பது அனைவருக்குமான உணவு என்பது மட்டும் அல்லாமல் வீட்டில் தினமும் பயன்படுத்தக் கூடிய ஒரு உணவாக உள்ளது, இப்படியிருக்கும் பட்சத்தில் அரிசி விலை மீதான இரண்டு இலக்குப் பணவீக்கம் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிலையில் அரிசி விலை உயர்வுக்கான முக்கியக் காரணத்தை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அரிசி பணவீக்கத்திற்கு முக்கியமான காரணம், அதன் குறைந்த பட்ச ஆதரவு விலையில் (MSP) நிலையான அதிகரிப்பும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக MSP விலைக்கு மேல் அரசு அரிசி கொள்முதல் செய்தல்..இதைத் தாண்டி பருவமழைகளில் எல் நினோவின் தாக்கம் காரணமாக இந்தியாவின் அரிசி உற்பத்தி சுமார் 4% குறைவதற்கான வாய்ப்பு மற்றும் கோழி மற்றும் எத்தனால் தொழிலில் இருந்து அரிசிக்கு இருக்கும் அதிகப்படியான டிமாண்ட் ஆகியவை அரிசி விலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரிசி மீதான MSP அதிகரிப்பும், அரிசி விலை உயர்விற்கு வழிவகுக்கிறது என்று தொழில் வல்லுநர்கள் கூறும் வேளையில், எவ்வளவு அதிகரித்துள்ளது என்பதைத் தெரிந்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். 2023-24 ஆம் ஆண்டிற்கான பொதுவான நெல் வகைக்கான MSP ஒரு குவிண்டால்-க்கு 2,183 ரூபாயாகும் .சத்தீஸ்கரில் புதிய பிஜேபி அரசாங்கம், கட்சியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற ஏக்கருக்கு 21 டன் நெல் என்ற வரம்புடன், எம்எஸ்பியை விட 42% அதிகமாக, அதாவது குவின்டாலுக்கு 3,100 ரூபாய் விலையில் நெல் கொள்முதல் செய்கிறது.இதேபோல் பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ விநியோகிக்கப்படும் அரிசி வகையின் விலை கடந்த ஆண்டு முதல் 30 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.