மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் சர்தார் – 2!

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.
இதனால், படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருந்தது.
சமீபத்தில் இப்பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி.எஸ்.மித்ரன் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படப்பிடிப்புக்கான பூஜை வருகிற பிப்.2 ஆம் தேதி சென்னையில் துவங்க உள்ளதாகவும் இப்படமே கார்த்தி நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் கார்த்தி மார்ச் மாதம் இந்தப் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.