சத்தம் போட்டுக்கூட பேசுனது இல்ல..பவதாரிணி மரண செய்தி கேட்டு ஆடிப்போய்விட்டேன்.. ஸ்ரீகாந்த் வேதனை!

சென்னை: பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், வியாழக்கிழமை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பவதாரிணி மரணத்தை கேட்டு ஆடிப்போய்விட்டேன் என்று நடிகர் ஸ்ரீகாந்த் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அனைத்துவிதமான சிகிச்சையும் பலன் அளிக்காததால், இலங்கைக்கு ஆயுர்வேத சிகிச்சைக்காக சென்றார். ஆனால், அந்த சிகிச்சையும் பலன் அளிக்காததால், நேற்று முன்தினம் உயிரிழந்தார். பவதாரிணிக்கு இலங்கையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மூலம் அவரது உடல் சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. பவதாரிணி உடலைப் பெற அவரது சகோதரர் கார்த்திக் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் சென்னை ஏர்போர்ட் வந்திருந்தனர். பிறகு ஏர்போர்ட்டில் இருந்து பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது.

ஆடிப்போய்விட்டேன்: அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பவதாரிணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, இளையராஜாவுக்கு ஆறுதல் கூறினர். அப்போது பேசிய நடிகர் ஸ்ரீகாந்த், பவதாரிணி இறந்த செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை, பல ஆண்டுகளாக நாங்கள் சேர்ந்து பயணம் செய்து கொண்டு இருக்கிறோம். என் படத்தில் அவர் பாடி இருக்கிறார் அனைவரும் ஒரு குடும்பமாக சேர்ந்து இருக்கிறோம். பவதாரிணியின் அம்மா இழப்பு மிகப்பெரிய இழப்பாக இருந்தது. இன்னைக்கு இப்படி ஒரு இழப்பு இதை இளையராஜா சார், கார்த்திக்,யுவன் எப்படி தாங்கிக்கொள்ள போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த மிகப்பெரிய இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை கடவுள் கொடுக்க வேண்டும்.

மிகப்பெரிய இழப்பு: மனசுக்குள் இவ்வளவு வலி இருந்த போதும், அதை யாரிடமும் காட்டிக்கொள்ளாமல் வெளியில் சிரித்து பேசிக்கொண்டுதான் இருந்து இருக்கிறார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவருமே எளிமையாக, கனிவாகத்தான் பேசுவார்கள். இதுவரைக்கும் கத்தியோ, சத்தம் போட்டு பேசியோ நான் பார்த்ததுக்கூட இல்லை. பவதாரிணி இழப்பு செய்தி கேட்டு நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன், கண்ணீர் மல்க நடிகர் ஸ்ரீகாந்த் பேசினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *