இப்படி ஒரு விளம்பரம் பார்த்ததுண்டா..! வீடு வாங்கினால் மனைவி இலவசம்..!
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது.
சீனாவின் வளர்ச்சிக்கு இத்தனை காலமாக ரியல் எஸ்டேட் துறை தான் முக்கிய காரணமாக இருந்தது. இப்போது ரியல் துறையிலும் சுணக்கம் இருக்கும் நிலையில், விற்பனையை அதிகரிக்க ரியல் எஸ்டேட் துறையினர் பல வினோதமான முறைகளில் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது வீடுகளின் விற்பனையை பூஸ்ட் செய்யும் என்றும் அந்த நிறுவனம் நினைத்து இருந்தது. அதற்கேற்ப இந்த விளம்பரம் சீனாவில் டிரெண்டானது.
ஆனால், மக்களின் ரியாக்ஷன் என்பது நேர் எதிராகவே இருந்துள்ளது. பொதுமக்கள் இந்த விளம்பரத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாகப் பெண்கள் இந்த விளம்பரத்தை மிகக் கடுமையாகச் சாடினர். பெண்களை எதோ பரிசு பொருட்களைப் போலக் காட்டும் இந்த விளம்பரத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இந்நிலையில் சீனாவில் டிரையஜின் நகரில் வீடு வாங்கினால் மனைவி இலவசம் என விளம்பரம் செய்த ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மீது ₹3 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
‘வீட்டை வாங்கி மனைவிக்கு பரிசாக கொடுங்கள் என நாங்கள் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது’ என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.