தைப்பூசத் திருவிழா; கோவில்கள் தோறும் அன்னதானம் வழங்கி சிறப்பித்த பாஜகவினர்
தைப்பூச தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பாஜகவின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் சார்பாக சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சி எல்டாம்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், பூங்காநகரில் அமைந்துள்ள கந்தகோட்டம் திருக்கோவில், திருவல்லிக்கேணியில் உள்ள எட்டாம்படை வீடு ஸ்ரீ முருகன் திருக்கோவில், வில்லிவாக்கத்தில் அமைந்துள்ள கல்யாண சுப்ரமணிய சுவாமி திருக்கோவில், அமைந்தகரையில் உள்ள அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், அண்ணாநகரில் உள்ள ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் திருக்கோவில்களில் நடைபெற்றது. அன்னதான நிகழ்வில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும் நிகழ்ச்சியின் போது கோவில்களில் சிறப்பு பிரச்சாரம் நடைபெற்றதுடன் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமும் விநியோகிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக ஒருங்கிணைத்த பாஜகவின் பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிஜேபியின் மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் பாராட்டுகளை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக மாநிலச் செயலாளர் வினோஜ் பி செல்வம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “தைப்பூசத் திருநாளை ஒட்டி, மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் தமிழக பாஜக சார்பில் அன்னதானம் மிகச் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது. ராமரை கொண்டாடிய நீங்கள், முருகனை கொண்டாடவில்லையே, என்று கவலை அடைந்த திராவிட ஸ்டாக்குகளுக்கான பதில்” என்று குறிப்பிட்டுள்ளார்.