சாலையோரத்தில் அமர்ந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் தர்ணா… மாணவர் அமைப்பு போராட்டத்தில் பரபரப்பு!
தனக்கு கருப்பு கொடி காட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் சாலையோரத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்நிலையில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கொல்லம் மாவட்டம் நிலமேல் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலமேல் பகுதியில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ அமைப்பினர் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காலை 11 மணியளவில் நிலமேல் பகுதியில் ஆளுநரின் வாகனம் வந்தபோது அவரது வாகனத்தை மறித்து மாணவர் அமைப்பினர் கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதனால், கோபமடைந்த ஆளுநர் ஆரிப் முகமது கான், காரில் இருந்து கீழே இறங்கி போராட்டக்காரர்களை நோக்கி சென்றார். அப்போது, போராட்டக்காரர்கள் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக முழக்கமிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. தொடர்ந்து போராட்டகாரர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டதாகக் கூறி ஆளுநர் சாலையோரம் உள்ள தேநீர் கடையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, ஆளுநரை மாநில காவல்துறை இயக்குநர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், டிஜிபியின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட ஆளுநர், குண்டர்கள் சாலையை ஆக்கிரமிக்க விட மாட்டேன் என்றும் ஆவசேமாகத் தெரிவித்தார்.
50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், 12 பேர் மட்டும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், போராட்டக்காரர்கள் மீது பதியபட்ட முதல் தகவல் அறிக்கையை காண்பிக்கும்படியும் ஆளுநர் முறையிட்டார். இந்நிலையில், கருப்பு கொடி காட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திலும் ஆளுநர் ஆரிப் முகமது கான் புகார் அளித்துள்ளார்.
சிறிது நேரம் பரபரப்பு மற்றும் பதற்றத்தை கிளப்பிவிட்ட கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானின் தர்ணா போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. கேரளாவில் ஆளுநருக்கு எதிராக போராட்டம் தொடர்வதால் Z+ பாதுகாப்ப மத்திய அரசு வழங்கியுள்ளதாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.எஃ.ஐ மாணவர் அமைப்பினரை நோக்கிச் சென்று தர்ணாவில் ஈடுபட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் அளித்த நிலையில் அம்மாநில ஆளுநரின் பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்தி உள்ளது.