ஆதார் அட்டையில் முக்கிய மாற்றம்: இனி பிறந்த தேதிக்கான சான்றாக பயன்படுத்த முடியாது… மத்திய அரசு தெளிவு
புதிதாக வழங்கப்படும் ஆதார் அட்டைகள் மற்றும் அதன் Pdf கோப்பு வடிவங்களில் ஆதார் அட்டையை பிறப்பு மற்றும் குடியுரிமைச் சான்றாக பயன்படுத்த முடியாது என்று அறிவிப்பு தெட்டத் தெளிவாக சுட்டுக் காட்டப்பட்டுள்ளது.
ஆதார் என்பது ஒரு தனிநபருக்கு வழங்கப்பட்ட 12 இலக்க தனிப்பட்ட ஐடி. ஒரு குடியிருப்பாளரை அடையாளம் காண பெயர், பிறந்த தேதி, பாலினம் மற்றும் முகவரி, முகத்தின் புகைப்படம், கைரேகைகள் மற்றும் கருவிழி போன்ற தகவல்களை பயன்படுத்திகிறது.
தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நாட்டின் இன்னபிற அரசு நிறுவன முகமைகள் பிறந்த தேதிக்கான ஆதாரச் சான்றாக (Proof of Date of Birth) ஆதார அட்டையை ஏற்றுக் கொள்ள முன்வரும் நிலையில், தற்போதைய அறிவிப்பு அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.
உதாரணமாக, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடைமுறையில், பிறந்த தேதிக்கு ஆதாரச் சான்றாக இளைஞர்கள் ஆதார அட்டையை சமர்ப்பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததது. தற்போது, இந்த நடைமுறை செல்லத்தக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து 180 நாட்கள் வசித்த அயல்நாட்டினர் ஒருவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருவதால், ஆதார் என்றுமே குடியுரிமைச் சான்றுக்கான ஆதாரமாக கொள்ளப்பட்டதில்லை.கடந்த ஆண்டு, வழங்கப்பட்ட ஆதார் அட்டையில், “குடியுரிமைச் சான்றுக்கான ஆதாரமாக ஆதார்ஏற்றுக் கொள்ளப்படாது” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது, பிறந்த தேதிக்கான சான்றாகவோ, பிறப்புக்கான சான்றாகவோ ஆதார் அட்டை கொள்ளப்படாது என்று தெளிவாக குறிப்பிடபபட்டுள்ளது.
முன்னதாக,பிறந்த தேதிக்கு ஆதாரச் சான்றாக ஆதார் அட்டை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்தது. இதுகுறித்து, அந்த அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில், ஆதார் என்பது பிரதானமாக பயனாளிகளை அங்கீகரிப்பதற்கான ஒரு செயல்முறை என்றும் பிறந்த தேதிக்கான சான்றாக அது இல்லை என்றும் தெரிவித்தது.
பான் அட்டை, பாஸ்போர்ட், அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்கள்/ பல்கலைக்கழகங்களால் கொடுக்கப்பட்ட மதிப்பெண் அட்டை, பள்ளி மாற்றுச் சான்றிதழ்/ பள்ளி இறுதி வகுப்புச் சான்றிதழ் ( (School Leaving Certificate) , ஓய்வூதிய சான்றிதழ்/ அரசால் வழங்கப்பட்ட வசிப்பிடச் சான்றிதழ்/ மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பிறந்த தேதியை நிறுவ முடியும் என்றும் தெரிவித்தது.