மண்சட்டியில் முருங்கைக்காய் சேர்த்து மீன் குழம்பு வச்சிப்பாருங்க… ருசி அப்படி இருக்கும்… செய்முறை இதோ!

‘மீன் குழம்பு’ பேரை கேட்டாலே நாவில் எச்சில் ஊரும். மீன் குழம்பு வைத்தால் தெருவே மணக்கும் என்பார்கள். அதுவும் முதல் நாள் வைத்த மீன் குழம்பை அடுத்த நாள் சாப்பிட்டால் அதன் ருசி அலாதிதான்.

பொதுவாக வீட்டில் மீன் குழம்பு வைத்துவிட்டால் இரண்டு நாளைக்கு மூன்று வேலையும் இதை வைத்துதான் இட்லி, தேசை, சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிடுவோம்.

அதேபோல் அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று பல சத்துக்கள் நிறைந்த ‘முருங்கைக்காய்’. இதில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. இதை சாம்பார், காரா குழம்பு, கருவாட்டு குழம்பு, வறுவல், பொரியல் என விதவிதமாக செய்து சாப்பிடுவோம்.

இப்படிப்பட்ட அனைவரும் விரும்பி உண்ணும் மீன் மற்றும் முருங்கைக்காயை சேர்த்து மண்சட்டியில் மணமணக்க மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்.

வாங்க ‘முருங்கைக்காய் மீன் குழம்பு’ எப்படி செய்யலாம் என்று இங்கே காணலாம்.

தேவையான பொருட்கள் :

மீன் – 1/2 கிலோ

முருங்கைக்காய் – 1

சின்ன வெங்காயம் – 10-15

தக்காளி – 1

பூண்டு – 4 பல்

புளி – சுவைக்கேற்ப

மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்

மிளகாய் – 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்

வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

கடுகு – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

உப்பு – சுவைக்கேற்ப

தண்ணீர் – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் மீனை துண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து நன்றாக கழுவி உப்பு மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து தனியாக வைக்க வேண்டும்.

குறிப்பு : மீனை கழுவும் போது தயிர், கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அலசினால் அதன் கவுச்சி வாசனை வராது.

அடுத்து மண்சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் சேர்த்துக்கொள்ளவும்.

குறிப்பு : உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்கள் சாதாரண கடாயை கூட உபயோக படுத்திக்கொள்ளலாம். ஆனால் மண்சட்டியில் மீன் குழம்பு வைத்து சாப்பிட்டால் அதன் சுவையும், வாசனையும் அப்படி இருக்கும்.

பிறகு வெந்தயத்துடன் கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

குறிப்பு : மீன் குழம்பை பொறுத்தவரை சின்ன வெங்காயம் தான் குழம்பிற்கு அதிக ருசி சேர்க்கும்.

வெங்காயத்தின் நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்து முருங்கைக்காயை நன்றாக அலசி அதை தேவையான அளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி வெங்காயத்துடன் சேர்த்து கண்டு கிளறி கொள்ளவும்.

பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து கலந்து மூடி வைக்கவும். அப்போதுதான் தக்காளி சீக்கிரம் மென்மையாக வேகும்.

தக்காளி நன்றாக மசிந்தவுடன் மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.

இந்த கலவையை மேலும் 5 நிமிடங்களுக்கு மூடி போட்டு சமைக்க வேண்டும்.

5 நிமிடங்களுக்கு பிறகு மூடியை எடுத்து அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.

குழம்பு நன்றாக தொதித்து வரும் போது அலசி வைத்துள்ள மீனை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.

குறிப்பு : கடைசியில் மீனை சேர்த்தால் தான் அது உடையாமல் அல்லது குழம்பில் கரையாமல் இருக்கும்.

மீன் நன்றாக வெந்து குழம்பின் மேல் எண்ணெய் மிதந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள்.

அவ்வளவுதான் சுவையான ‘முருங்கைக்காய் மீன் குழம்பு’ தயார்…

இதை மதிய நேரத்தில் சூடான சாதத்துடன் சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *