விடைபெற்றார் ‘ராஜாமகள்’: பாட்டி, தாய் நினைவிடம் அருகே உடல் நல்லடக்கம்
தேனி மாவட்டம் பண்ணைபுரம் லோயர் கேம்ப் பகுதியில், இளையராஜாவின் பண்ணை வீட்டில் பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இளையராஜவின் சொந்த ஊரான தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் வைக்கப்பட்ட மறைந்த பாடகி பவதாரிணியின் உடலுக்கு ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். கண்ணாடி பேழைக்குள் வைக்கபப்ட்டிருந்த மகள் பவதாரிணியின் உடலை பார்த்தவாறு இளையராஜா உடைந்துபோய் அமர்ந்திருந்தார். இயக்குநர் பாராதிராஜா துக்கத்தில் தள்ளாடியப்படி வந்து பவதாரிணியின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவரை இளையராஜா ஆறுதல்படுத்தினார். பவதாரிணி உடலுக்கு சிவாச்சாரியார்கள் திருவாசகம் முற்றோதுதல் வழிபாடு நடத்தினர்.
இறுதி அஞ்சலியை தொடர்ந்து பவதாரிணியின் உடலுக்கு இளையராஜா குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன. பவதாரிணி தேசிய விருது பெற்ற ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ பாடலை குடும்பத்தினர் பாடி இறுதிச் சடங்கை நிறைவு செய்த போது அங்கிருந்தவர்கள் கண்ணீர் சிந்தினர்.
பவதாரணியின் உடலை சகோதரர்கள், குடும்பத்தினர் சுமந்து சென்றனர். பாட்டி சின்னத்தாய், தாய் ஜீவா ஆகியோரின் நினைவிடத்தின் அருகே பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி. ரவீந்திரநாத், மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்செல்வன், பேராசிரியர் ஞானசம்பந்தன், இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் பவதாரிணி உடலுக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தி, இளையராஜா மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.