ஒருவேளை உணவு ரூ.90 லட்சமா..? விமர்சனத்திற்குள்ளான பிரபல உணவகம்
ஒரு நேர சாப்பாட்டிற்கான பில் ரூ. 90 லட்சம் என்று பிரபல சமையல்காரரும் உணவக உரிமையாளருமான நுஸ்ரத் தனது இன்ஸ்டா சமூக வலைதளத்தில் பில்லை வெளியிட்டுள்ளார். இது நெட்டிசன்கள் மத்தியில் விவாதத்தை கிளப்பியுள்ளது. சால்ட் பே எனப்படும் நுஸ்ரத் என்ற பிரபல சமையல்காரர் இணையத்தில் மிகவும் பிரபலமான நபராக உள்ளார்.
மாட்டிறைச்சியை விதவிதமாக சமைத்துப் போடும் நுஸ்ரத் அதன் இறுதியில் உப்பை நல்ல பாம்பு தலையை தூக்குவது போல் தூவி விடுவார். அவரது இந்த ஸ்டைலை பல்வேறு பிரபலங்களும் பதிவிட்டு இருக்கிறார்கள். நுஸ்ரத் என்ற இயற்பெயரை கொண்ட சால்ட் பே, துபாயில் நுஸ்ரத் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். அங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் அதிக தொகை கொண்டவை என்று பரவலாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் தன்னுடைய உணவகத்தின் பில்லை இன்ஸ்டாகிராமில் நுஸ்ரத் சில நாட்களுக்கு முன்பாக பதிவிட்டார். அந்த பில்லில் இந்திய மதிப்பில் ரூபாய் 90 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சுமார் 25 பதார்த்தங்களுக்கு மட்டும் 90 லட்சம் ரூபாய் விலையாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பில்லை வெளியிட்டுள்ள நுஸ்ரத் ‘காசு வருகிறது காசு போகிறது’ என்று தலைப்பு கொடுத்துள்ளார். நுஸ்ரத்தின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் சரமாரியாக கமெண்ட் செய்துள்ளனர்.
இந்த 90 லட்சம் ரூபாய்க்கு ஏழைகளுக்கு ஒரு மாதத்திற்கு உணவளிக்கலாம் என்று ஒருவர் கூறியுள்ளார். மிகவும் அதிகமாக மதிப்பிடப்பட்ட உணவகம் என்று ஒரு யூசரும், பல கோடி பேர் பசியால் வாடும் போது ஒருவேளை சாப்பாட்டிற்கு 90 லட்சம் செலவழிக்கலாமா என்று ஒரு யூசரும் கமெண்ட் செய்துள்ளனர்.
90 லட்சம் ரூபாய்க்கு ஒரு லட்சம் குழந்தைகளுக்கு நாம் உணவு கொடுக்க முடியும், என்று ஒரு இன்ஸ்டா பயனர் உருக்கமாக கூறியுள்ளார். மொத்தத்தில் நுஸ்ரத் பதிவிட்டுள்ள உணவக பில், அவர் மீதான மதிப்பை சமூக வலைதளங்களில் குறைத்துள்ளது.