43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம்… டென்னிஸில் சாதனை படைத்த இந்தியாவின் ரோகன் போபன்னா
டென்னிஸ் போட்டிகளில் அதிக வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை இந்தியாவின் ரோகன் போபன்னா ஏற்படுத்தியுள்ளார். 43 வயதில் அவர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றிருப்பதற்கு விளையாட்டு துறையை சேர்ந்த பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த வியாழன் என்று அவருக்கு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதை அறிவித்தது கவனிக்கத்தக்கது.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டென்னிஸ் உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.
நாளையுடன் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நிறைவு பெறுகின்றன. இந்நிலையில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் ரோகன் போபன்னா- ஆஸ்திரேலியாவின் மேத்யூ எப்டன் இணை – இத்தாலியன் சிமோன் போலேலி மற்றும் ஆண்ட்ரியா வவாசோரி இணையை எதிர்கொண்டது.
மூத்த வீரர்களான ரோகன் போபன்னா – மேத்யூ எப்டன் இணை அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியை நிலை குலையச் செய்தது. 43 வயதாகும் போபன்னா, இளம்வீரர்களே வியக்கும் வகையில் நேர்த்தியான ஆட்டத்தை இன்று வெளிப்படுத்தினார்.
மேட்ச்சில் 7-6, 7-5 என்ற செட் கணக்கில் போபன்னா இணை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. தனது 43 வது வயதில் போபன்னா கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சாம்பியன் பட்டம் என்ற அதிக வயதான நபர் என்ற சாதனையை இந்தியாவின் ரோகன் போபன்னா நிகழ்த்தியுள்ளார்.