ஒரு மூட்டைக்கு 5 கிலோ வரையிலும் எடை குறைவு : அதிரும் குடும்ப அட்டைதாரர்கள்..!
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மிக குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல, ரேஷன்தாரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும், அவர்களிடம் கடுமையை காட்டக்கூடாது என்றும் ரேஷன் ஊழியர்களுக்கு பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக, எந்த காரணம் கொண்டும் பொருட்கள் ரேஷன் கடைகளில் தேங்கியிருக்க கூடாது, தேங்கும் பொருட்களை கடையில் இருப்பு வைக்காமல், கிடங்குகளுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
மேலும், ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்காக அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்குகளில் இருந்து கடைகளுக்கு அனுப்பப்படும் ரேஷன் பொருட்களின் எடை குறைவாக இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பொதுவாக பருப்பு, கோதுமை, அரிசி ஆகிய உணவு பொருட்களே மூட்டைகளாக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு அனுப்பும் போது ஒரு மூட்டைக்கு 5 கிலோ வரையிலும் எடை குறைவாக இருக்கிறது. இந்த எடை குறைவை ஈடு செய்வதற்காகவே சில சமயங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் தவறு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும், அரசு இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைக்கு, அதிகாரிகள் தீர்வு காணாமல் இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்களே அதிருப்தி அடைந்துள்ளனர். ஒருகட்டத்தில் நொந்துபோய், சமூக வலைதளங்களில் இந்த புகாரை பதிவிடவும் துவங்கி விட்டார்களாம்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எடை குறைவாக அனுப்பப்படும் மூட்டைகளை போட்டோக்களாக எடுத்து, சோஷியல் மீடியாவில் புகார்களை பதிவிட்டு வருகிறோம். இதை பார்த்தாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கிறார்கள்.