400 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஸ்விகி நிறுவனம் திட்டம்..? அப்படி என்ன காரணம் தெரியுமா?
அப்படியென்ன பொருளாதார நெருக்கடி என்று தெரியவில்லை. பெருநிறுவனங்கள் அனைத்தும் தங்களின் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருவது தான் தற்போது விவாதத்துக்குள்ளாகி இருக்கும் காரியம். மைக்ரோசாப்ட், கூகுள் என அனைத்து நிறுவனங்களும் தங்களின் வேலையாட்களின் திறனை குறைத்து வருகிறது. அந்த வகையில் உணவு விநியோகம் செய்யும் நிறுவனமாக ஸ்விகியும் ஊழியர்களின் எண்ணிக்கை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, 400 ஊழியர்களை நிறுவனம் நீக்க திட்டமிட்டுள்ளது. இது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 6 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் செலவினத்தைக் குறைத்து, தொழிலை வளர்க்க திட்டமிட்டுள்ளதன் விளைவாக தான் ஆள்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது. தொழில்நுட்பம், கால் சென்டர், தலைமைப் பொறுப்புகள் போன்ற அனைத்து துறைகளில் இருந்து ஊழியர்கள் நீக்கப்படுகின்றனர். அடுத்தடுத்த வாரங்களின் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஸ்விகி கூறியிருக்கிறது.
எனினும், வேலையை விட்டு நீக்கும் ஊழியர்களுக்கு எத்தனை மாதங்களுக்கு ஊதியம் வழங்கப்படும், இழப்பீடு தொகை ஏதேனும் வழங்கப்படுமா? என்பது குறித்த எந்தத் தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. இது நிறுவனத்தின் முதல் நடவடிக்கை என்று எண்ணி விட வேண்டாம். 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஸ்விகி நிறுவனம் கிட்டத்தட்ட 380 ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியது நினைவுக்கூரத்தக்கது. நிறுவனத்தின் மந்தமான வளர்ச்சி மற்றும் அதிகளவில் ஊழியர்களை சேர்த்தது இதற்கு காரணமாக கூறப்பட்டது.
ஒருபக்கம் ஆள்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வந்தாலும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ‘ஸ்விகி இன்ஸ்டாமார்ட்’ சேவையை விரிவுபடுத்த நிறுவனம் முனைப்புக் காட்டி வருகிறது. ஸ்விகி இன்ஸ்டாமார்ட் என்பது மளிகை பொருள்களை வீடுகளுக்கு டெலிவரி செய்யும் சேவையாகும். இதில் முன்னணியில் இருக்கும் பிக்பாஸ்கட், செப்டோ, பிளிங்கிட் நிறுவனங்களுக்குப் போட்டியாக உணவு டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களாக ஸ்விகியும், சொமேட்டோவும் களம் இறங்கி செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், தங்களின் இன்ஸ்டாமார்ட் சேவையை மேம்படுத்தவும், அதிக பணத்தை அதில் முதலீடு செய்யவும் ஸ்விகி திட்டமிட்டுள்ளது. ஊழியர்களை நீக்குவது இதுவே கடைசி முறை என்று நிறுவனம் இதுவரை தெரிவிக்காததும், செலவினத்தைக் குறைக்க ஸ்விகி முனைவதும், கூடுதல் வேலை இழப்புகள் வரும் காலங்களில் இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் விதத்தில் இருப்பதாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
தொடர்ந்து நிறுவனம் பொது பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. ஸ்விகியின் போட்டி நிறுவனமான சொமேட்டோ இந்திய பங்கு சந்தையில் சமீபத்தில் பட்டியலிடப்பட்டது. தற்போது ஸ்விகியும் அதற்கு தயாராகி வருகிறது. உலகளவில் இருக்கும் பெருநிறுவனங்கள் அனைத்தும் தங்களின் ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருவது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். எந்த நேரமும் ’நம் வேலை நம்மை விட்டுப் போகலாம்’ என்ற எண்ணம் ஊழியர்கள் மத்தியில் இருக்கிறது. இதற்கு சமூக வலைத்தளங்களில் இருக்கும் பல நிறுவன ஊழியர்களின் பேட்டிக் காணொளிகள் சான்றாக இருக்கின்றன.