“இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எங்களுக்கு கடினமானதாக இருக்கும்” – தென் ஆப்பிரிக்க வீரர் கோட்ஸி
இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்க அணி வீரர்களுக்கு கடினமாக இருக்கும் என்று தென் ஆப்பிரிக்க அணி வீரர் ஜெரால்டு கோட்ஸி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்நிலையில், ஒருநாள் தொடரை இந்தியஅணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்தொடர் நடைபெற உள்ளது. செஞ்சுரியன் நகரில் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை (டிசம்பர்26) தொடங்கவுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் நடத்தப்படும் டெஸ்ட் போட்டி இது என்பதால் இதை `பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டி என்று அழைக்கின்றனர்.
இந்த டெஸ்ட் தொடர் குறித்து தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ஜெரால்டு கோட்ஸி கூறியதாவது: டி20 தொடரை நாங்கள் சமன் செய்தோம். ஆனால் ஒரு நாள் தொடரை இந்திய அணியிடம் நாங்கள் இழந்துவிட்டோம். எனவே, இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் என்பது தென் ஆப்பிரிக்க அணிக்கு கடினமான ஒன்றாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். இந்திய அணி பலம் வாய்ந்ததாக உள்ளது.
இந்திய அணியில் உள்ளரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக என்னைசோதிக்க விரும்புகிறேன். அந்த வகையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கு எதிராக என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். நான்எப்போதுமே கிரிக்கெட்டை விரும்பி விளையாடக்கூடிய நபராகவே இருந்து வந்துள்ளேன்.
ரோஹித், விராட் கோலி ஆகிய 2 கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு எதிராக பந்துவீசி என்னை நான் பரிசோதிக்க நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக நான் சவால் அளிக்கும் வகையில் பந்துவீச முயற்சிப்பேன். என்னைப் போன்ற பல வீரர்களை அவர்கள் எதிர் கொண்டு விளையாடி இருப்பார்கள். அவர்கள் மிகவும் திறமையான வீரர்கள் என்பதில் சந்தேகமில்லை.
ஆனாலும் அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று நினைக்கிறேன். அதோடு இதுபோன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்துவீசும்போது எனக்கும் நல்ல அனுபவம் கிடைக்கும். இந்தத் தொடரை நாங்கள் வெற்றியுடன் முடிக்க விரும்புகிறோம். இவ்வாறு ஜெரால்டு கோட்ஸி கூறினார்.