Happy Teeth: வாய் துர்நாற்றம் நீங்க சூயிங்கம் மெல்வது தீர்வாகுமா?
பற்களை ஆரோக்கியமாகப் பராமரித்தால் பற்களில் பிரச்னை வராமல் தடுக்க முடியும். அந்த வகையில், பல் ஆரோக்கியத்தை பாதிக்கும் விஷயங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி பேசியிருக்கிறார் சென்னையைச் தேர்ந்த பல் மருத்துவர் ஏக்தா:
பல் ஆரோக்கியத்துக்கு உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டுக்கும் முக்கியப் பங்கு இருக்கிறது. அனைத்து சத்துகளும் அடங்கிய சமச்சீர் உணவாக எடுத்துக்கொள்வது உடல்நலத்துக்கு மட்டுமல்ல பற்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
ஃபிரெஷ்ஷான காய்கறிகள், பழங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பழங்களை ஜூஸாக இல்லாமல் அப்படியே கடித்துச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள் போன்ற பழங்கள் இயற்கையாக பற்களை சுத்தப்படுத்தும் தன்மை (Cleansers) கொண்டவை. சில நேரங்களில் துர்நாற்றத்தையும் இவை கட்டுப்படுத்தும்.
அதேபோல பூண்டு, வெங்காயம் உள்ளிட்ட சில காய்கறிகளை பச்சையாக சாப்பிடும்போது வாய் துர்நாற்றம் வீசும். அதுபோன்ற நேரங்களில் இரவு கட்டாயம் பிரஷ் செய்ய வேண்டும்.
மறுநாள் காலையில் வாயில் துர்நாற்றம் வீசுவதை இது தடுக்கும். அளவுக்கு அதிகமாக காபி, டீ குடிக்கும்போது வயிற்றில் அசிடிட்டி ஏற்படுவதோடு பற்களில் கறையும் ஏற்படும். எனவே, காபி, டீ அளவோடு குடிக்க வேண்டும். காபி, டீ குடித்த உடன் சிறிது தண்ணீர் குடித்தால் பற்களில் கறை படிவது சிறிது தடுக்கப்படும். உணவில் தயிர், மோர் சேர்த்துக்கொள்வது நல்லது. இவற்றில் காணப்படும் நல்ல பாக்டீரியாக்கள் (Probiotics) பற்களை, வாயை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை.