லோகேஷ் கனகராஜை நேரடியாக அட்டாக் செய்த எஸ்.ஏ.சந்திரசேகர்! என்ன சொன்னார் தெரியுமா?
அப்போது அவர் தான் சமீபத்தில் ஒரு படத்தை பார்த்ததாகவும் அது குறித்து விமர்சனம் தெரிவிக்கையில் அந்த இயக்குநர் விமர்சனத்தை காது கொடுத்து கேட்கவில்லை என்றும் கூறினார். இவர், லோகேஷ் கனகராஜ்ஜைத்தான் அப்படி கூறுகிறாரோ என பலர் பேசி வருகின்றனர்.
தேசிங்கு ராஜா 2 பட விழா:
2013ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், தேசிங்கு ராஜா. இந்த படத்தில் விமல் ஹீராேவாக நடித்திருப்பார், பிந்து மாதவி அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார். முதல் பாகத்தை இயக்கிய எழில், இந்த படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிமுக விழா நேற்று (ஜனவரி 27) நடைப்பெற்றது. இதில் ஜெயம்ரவி, சித்ரா லக்ஷ்மனன், வித்யாசாகர், கே.எஸ்.ரவிகுமார், பேரரசு, விமல், எஸ்.ஏ.சந்திர சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, இயக்குநரும் நடிகரும், விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
லியோ படம் குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..
எஸ்.ஏ.சந்திரசேகர், விழாவில பேசிய போது சமீபத்தில் வெளியான ஒரு படத்தை தான் பார்த்ததாகவும், அதன் பிறகு அப்படத்தின் இயக்குநருக்கு போன் செய்து பேசியதாகவும் கூறினார். அப்போது, படத்தின் முதல் பாதி மிகவும் நன்றாக இருப்பதாகவும் இது போல யாராலும் எடுக்க முடியாது என்று பாராட்டியபோது அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார். தொடர்ந்து, இரண்டாவது பாதியில் வரும் நரபலி போன்ற விஷயங்களை நீங்கள் படத்தில் குறிப்பிட்டுள்ள மதத்தில் இருப்பவர்கள் செய்வதில்லை என்று தான் கூறியதாகவும் குறிப்பிட்டார். அப்போது தான் பாராட்டுகையில் பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அந்த இயக்குநர், படம் குறித்து விமர்சனம் கூறுகையில் “சார் நான் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்..5 நிமிடங்கள் கழித்து கூப்பிடுகிறேன்…” என கூறிவிட்டு இன்றளவும் தனக்கு அவர் திரும்ப போன் செய்யவில்லை என்று பேசினார், எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த படம் வெளியாவதற்கு முன்பு பார்த்து விட்டு தான் இந்த விமர்சனங்களை கூறியதாகவும், படம் வெளியான பிறகு தான் கூறிய அதே விமர்சனத்தை மக்கள் அனைவரும் கூறியதாகவும் பேசியுள்ளார்.
லியோ படத்தை தாக்கினாரா?
கடந்த ஆண்டு வெளியான லியோ படம் நல்ல வசூலை பெற்றிருந்தாலும் விமர்சனத்தில் பயங்கர அடி வாங்கியது. இந்த படத்தில்தான் ஹீரோவின் தங்கையை நரபலி கொடுக்கும் வகையில் கதையும் அமைக்கப்பட்டிருந்தது. எனவே இவர் லியோ படத்தையும் லோகேஷ் கனகராஜ்ஜையும்தான் நேரடியாக தாக்கியுள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ஏ.ஆர் முருகதாஸை பாராட்டிய எஸ்.ஏ.சந்திரசேகர்
ஒரு படத்தை பார்த்த போது, அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ் குறித்து காண்பிக்கப்பட்டதாகவும் அப்போது அவரிடம், “எனக்கு ஸ்லீப்பர் செல்ஸ் என்றால் என்னவென்று புரியும்..ஆனால் அது ரசிகர்களுக்கு புரியுமா” என்று அவரிடம் கேட்டதாகவும் பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சி. அதன் பிறகு அந்த படத்தில் ஸ்லீப்பர் செல்ஸ்கள் யார் என்று தனி காட்சி இடம் பெற்றிருந்ததாகவும், தான் கேட்ட கேள்விக்கு அவர் படத்தில் விடையை வைத்திருப்பது அவரது பக்குவத்தை காட்டுவதாக கூறியிருந்தார்.