முதல் மாருதி எலக்ட்ரிக் காருக்கு எதிர்பார்ப்பு கூடிட்டே போகுது!! மீண்டும் டெஸ்ட்டிங் ஸ்டார்ட்…

மாருதி சுஸுகி இ.வி.எக்ஸ் (Maruti Suzuki eVX) எலக்ட்ரிக் எஸ்யூவி கார் மீண்டும் ஒருமுறை பொது சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன. ஆனால், இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி இன்னமும் எலக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் இறங்கவில்லை. ஆனால், அதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுப்பட எப்போதோ மாருதி சுஸுகி ஆரம்பித்துவிட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி சுஸுகி சார்பில் இ.வி.எக்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கான்செப்ட் காட்சிக்கு நிறுத்தப்பட்டது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். அதன்பின், கடந்த ஆண்டின் இறுதியில் ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ மோட்டார் கண்காட்சியிலும் சுஸுகி இவிஎக்ஸ் காட்சிப்படுத்தப்பட்டது.

இதனால், மாருதி சுஸுகியில் இருந்து சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ள முதல் எலக்ட்ரிக் காராக இவிஎக்ஸ் விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், மாருதி சுஸுகி இவிஎக்ஸ் கார் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பொது சாலையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் இவிஎக்ஸ் கார் ஒன்று முழுவதும் மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில், சாலையில் ஓட்டி சோதனை செய்யப்பட்டு உள்ளது.

தற்போது கிடைத்துள்ள படங்களில், காரை சுற்றிலும் டேப் போன்று ஒட்டப்பட்டு உள்ளதால், இவிஎக்ஸ் எலக்ட்ரிக் காரின் வடிவம் எவ்வாறானதாக இருக்கும் என்பதை பார்க்க முடிகிறது. இவிஎக்ஸ் கான்செப்ட்டில் பின்பக்க டெயில்லேம்ப்கள் வேறு டிசைனில் இருந்தன. ஆனால், இந்த சோதனை இவிஎக்ஸ் காரில் வேறு டிசைனில் உள்ளன. ஆதலால், இந்த டெயில்லேம்ப்கள் தற்காலிகமாக பொருத்தப்பட்டவையாக இருக்க வேண்டும்.

காரின் முன்பக்கத்தில் கால்ம்ஷெல் வடிவில் பொனெட், நன்கு அகலமான வீல் ஆர்ச்சஸ், மூடப்பட்ட முன்பக்க கிரில் மற்றும் சற்று சறுகலான ரூஃப்லைன் உள்ளிட்டவற்றையும் இந்த இவிஎக்ஸ் சோதனை காரில் பார்க்க முடிகிறது. டர்ன் இண்டிகேட்டர்கள் வழக்கம்போல் காரின் விங் மிரர்ஸில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சோதனை காரில் ஸ்மார்ட் டோர் ஹேண்டில்ஸ் இல்லை, அதற்கு பதிலாக வழக்கமான டோர் ஹேண்டில்ஸ் உள்ளது.

அதேபோல், இவிஎக்ஸ் கான்செப்ட்டில் இருந்ததை போல் புதுமையான டிசைனில் அலாய் சக்கரங்கள் இந்த சோதனை காரில் இல்லை. காரின் மேற்கூரையில் சுறா துடுப்பு வடிவில் ஆண்டென்னாவும், காரின் பின்பக்கத்தில் ஸ்டாப் லேம்ப் உடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர், கிடைமட்டமான ஒளி பிரதிபலிப்பான் உடன் பம்பர் மற்றும் ஷார்ப் லைன் உடன் பின்பக்க கதவு உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன.

சுஸுகி ஒய்.ஒய்8 ஸ்கேட்போர்டு பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் இவிஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 60kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த எலக்ட்ரிக் காரின் ரேஞ்சை 550கிமீ ஆக எதிர்பார்க்கிறோம். இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.15 லட்சமாக எதிர்பார்க்கிறோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *