Blue Sattai Maran: “நான் சங்கி இல்லை…” ரஜினிக்கு எதிராக ஆதாரங்களை அடுக்கும் ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எனது அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் வைரலானது. இதனையடுத்து ஐஸ்வர்யாவின் இந்த பேச்சுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். இப்போது சில ஆதாரங்களையும் வெளியிட்டு ரஜினியை பங்கம் செய்துள்ளார்.
ரஜினிக்கு எதிராக ஆதாரங்களை அடுக்கும் ப்ளூ சட்டை
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாகிறது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இந்நிலையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது இயக்குநர் ஐஸ்வர்யா அவரது அப்பா ரஜினிகாந்த் குறித்து பேசியிருந்தார்.
அதாவது, எனது அப்பா ரஜினி சங்கி கிடையாது என எமோஷனலாக பேசினார். அவரை பலரும் சங்கி என விமர்சிக்கிறார்கள், அதனை கேட்கும் போது வருத்தமாக இருக்கிறது. ரஜினிகாந்த் ஒரு சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார். சங்கியாக இருக்கும் ஒருவரால் இந்தப் படத்தில் கண்டிப்பாக நடிக்க முடியாது. நீங்கள் எந்த மதமாக இருந்தாலும் லால் சலாம் உங்களை பெருமைப்படுத்தும். ரஜினிகாந்த் நிச்சயமாக சங்கி இல்லை என அழுத்தமாக பேசியிருந்தார்.
அப்போது அதனை கேட்டுக் கொண்டிருந்த ரஜினியின் கண்கள் கலங்கின. லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இவ்வாறு பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அதேநேரம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இப்படி பேசிய பின்னரும் கூட ரஜினியை பலரும் சங்கி என விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. பணம் சம்பாதிக்க லால் சலாம் படத்தில் நடிக்கும் ரஜினி, அதனை காப்பாற்ற ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போடுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதேபோல் ப்ளூ சட்டை மாறனும் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஏற்கனவே ரஜினிக்கு எதிராக ட்ரோல் செய்து வரும் அவர் இப்போது இரண்டு வீடியோக்களை ஷேர் செய்துள்ளார். “நான் சங்கி இல்லை..” என்ற கேப்ஷனில் வெளியாகியுள்ள இந்த வீடியோக்களில் ரஜினி கருத்தியல் ரீதியாக பேசியவைகளை ஷேர் செய்துள்ளார். அதாவது முதல் வீடியோவில் துக்ளக் விழாவில் ரஜினி பேசி சர்ச்சையானதை பகிர்ந்துள்ளார்.