ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்திய சிறுதானியங்கள் உற்பத்தி குறித்த கருத்தரங்கம்… பல்துறை வல்லுனர்கள் பங்கேற்பு
சிறுதானியங்கள் உற்பத்தியை பெருக்குவதற்கான வேளாண் கொள்கைகள் மற்றும் நடைமுறை சார்ந்த கருத்தரங்கத்தை ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தியுள்ளது. இதில் பல்துறை வல்லுனர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.
இந்தியாவில் வேளாண் உற்பத்தியை ஊக்கப்படுத்துவதற்காக நீடா அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் அறக்கட்டளை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக சிறுதானிய உற்பத்தியை அதிகரிப்பது, நடைமுறையில் அது தொடர்பான சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்த கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்த கருத்தரங்கத்தில் அரசு மற்றும் தனியார் துறையை சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்று தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுபா தாகூர் பங்கேற்று பேசுகையில், சிறு தானியங்களின் உற்பத்தியை பெருக்குவதற்காக ஆறு முக்கிய நடவடிக்கைகளை, வர்த்தகம் மற்றும் சுகாதார துறையுடன் இணைந்து மேற்கொண்டுள்ளோம்.
விவசாயிகளின் நலனுக்காக பல்துறை வல்லுனர்களை ரிலையன்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைத்திருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விவசாயிகள் தங்களது வருமானத்தை அதிகரிப்பதற்கு உற்பத்தி பொருட்களின் மதிப்பை அதிகரிக்க வேண்டும். அவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் போது வருமானம் பெருகும் என்று தெரிவித்தார்.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ஜெகநாத்குமார் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளாக உலகில் உணவு அமைப்பு முறை குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. சிறு தானியங்களின் முக்கியத்துவத்தை உலகம் உணர்ந்துள்ளது. இந்தியாவில் அதிக அளவு சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பருவநிலை மாற்ற சவால்கள் வறட்சி உள்ளிட்டவை சிறு தானியங்களின் உற்பத்திக்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்றன. அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். சிறு தானிய உற்பத்தியில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வேண்டும். இதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த கருத்தரங்கத்தை நடத்துகிறது என்று தெரிவித்தார்.
கருத்தரங்கில் பங்கேற்ற விவசாய பிரதிநிதிகள், தொழில்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் சிறுதானிய உற்பத்தியில் உள்ள சவால்கள் குறித்து விரிவாக பேசினர். 2018 ஆம் ஆண்டு இந்தியாவில் சிறு தானிய தேசிய ஆண்டாக கடைபிடிக்கப்பட்டது. மார்ச் 2021 ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டு கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா ஐநா சபையில் முன் வைத்தது.
இதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் சிறு தானியங்களை உண்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் அவற்றை வளர்க்கும் முறைகள் குறித்தும் பரவலாக தெரிவிக்கப்படுகிறது. 2019 – 22 ஆண்டுகளில் இந்தியா சராசரியாக சுமார் 17 மில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு சிறு தானியங்களை உற்பத்தி செய்தது. 2014 – 18 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது 11% அதிகம் ஆகும். ஆண்டுக்கு ஆண்டு சிறு தானியங்களின் உற்பத்தி இந்தியாவில் அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது.