“பாஜகவிற்கு வேலையே இதுதான்.. ஒன்று சேர்ந்து செரித்துவிடுவார்கள்” கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து மீண்டும் வெளியேறுவார் என வதந்தி பரவிய நிலையில், இன்று பிகார் மாநில ஆளுநர் ராஜேந்திர அர்லேகரைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
இதன் பின் பாஜக ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதிஷ்குமார், “ராஜினாமா செய்துவிட்டேன். பல்வேறு தரப்பிடம் வந்த கோரிக்கையின் அடிப்படையிலும், அரசியல் சூழல் காரணமாகவும் லாலுவுடனான கூட்டணியில் இருந்து வெளியேறினேன். லாலு காங்கிரஸ் உடனான மகா கூட்டணி ஆட்சி முறிந்துவிட்டது. விரைவில் புதிய கூட்டணியை அமைப்பேன். பாஜக உடனான கூட்டணி அமைப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்“ என தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் 4 ஆவது முறையாக கூட்டணியை மாற்றியுள்ளார் நிதிஷ்குமார்.
திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் இதுகுறித்து புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, “என்னைப் பொறுத்தவரையில் மக்கள் எல்லா நேரத்திலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 2006க்கு பிறகு நிதிஷ்குமாருக்கு இது ஐந்தாவது யுடர்ன். நான் இப்போதும் சொல்கிறேன். நிதிஷ்குமார் எனும் தலைவர் ஜேபி எனும் மிகப்பெரிய தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்டவர். அவர் மீது எங்களுக்கு மரியாதை உண்டு. இப்போதும் அந்த மரியாதையை நாங்கள் வைத்திருக்கிறோம் அது வேறு. ஆனால் நாம் மரியாதை வைத்திருக்கிறோம் என்பதற்காகவே பொதுமக்களும் நம்பகத்தன்மையை வைத்திருப்பார்களா. அப்படியானால் போன ஆண்டு அவர் ஏன் போனார், இப்போது ஏன் வந்தார் என்பதற்கு மக்களிடம் பதில் சொல்ல வேண்டும்.
இல்லையெனில் இந்த விஷயத்தில் பாஜக ஏதேனும் சில விஷயங்களை செய்திருக்குமானால், பாஜகவிற்கு வேலையே இதுதான்., ஒன்று அவர்கள் எதிர்த்து நிற்க முடிந்தால் பார்ப்பார்கள், இல்லையெனில் ஒன்று சேர்ந்து செரித்து முடித்துவிடுவார்கள். ஒன்றுமே இல்லாத பாஜகவை கூட்டணி சேர்த்து நிதிஷ்குமார் வளர்த்துவிட்டார். இந்த தேர்தலோடு அநேகமாக தனது கட்சியை முழுவதுமாக பாஜகவிடம் விட்டுவிடுவார் என்பதைத்தான் நாங்கள் நினைக்கின்றோம். பாஜகவின் சூழ்ச்சி வலையில் நிதிஷ்குமார் மாட்டியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.