கார்ல போகும் போது எவ்வளவு நேரத்துல வருவேன்னு மெசேஜ் அனுப்புறது இவ்வளவு ஈசியா? இது வேற லெவல்ல இருக்குது!
கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பத்தில் புதிதாக செயற்கை நுண்ணறிவு அம்சங்களை அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் இனி ஆண்ட்ராய்டு ஆட்டோவை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு கார் ஓட்டிக்கொண்டே சுலபமாக ஆண்ட்ராய்டு ஆட்டோ அம்சங்களை பயன்படுத்த வழிவகை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
கூகுள் நிறுவனம் வாகனங்களில் தொழில்நுட்ப வசதியை பொருத்தும் வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ என்ற தளத்தை வழங்கி வருகிறது. இதன் மூலம் காரின் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீனில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் காரின் பயனர் தனது செல்போனை காருடன் இணைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் கார் குறித்த தகவல்களை தனது செல்போன் மூலம் அவரால் பார்க்க முடியும். மேலும் சில அப்டேட்டுகளையும் சில ஆப்ஷன்களையும் செல்போன் மூலமே ஆப்ரேட் செய்ய முடியும்.
கூகுள் நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக இந்த ஆண்ட்ராய்டு ஆட்டோ சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இந்த சேவையை மேம்படுத்தும் வகையில் தற்போது இதில் புதிதாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை புகுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆண்ட்ராய்டு ஆட்டோ பயனர்கள் சுலபமாக இதை கையாள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கை நுண்ணறிவு முறையால் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது பயனர் மெசேஜ் செய்வது போன் மூலம் பேசுவது கூகுள் அசிஸ்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை செய்ய முடியும். கார் ஓட்டுவதில் இருந்து தனது கவனத்தை திசை திருப்பாமல் இந்த விஷயத்தையும் செய்து முடிக்க முடியும்படி இந்த அப்டேட் கொண்டு வரப்பட உள்ளது.
இதனால் டிரைவர் தேவை இல்லாமல் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஸ்கிரீனில் ஆப்ஷன்களை தேர்வு செய்யும் முறையெல்லாம் குறைக்கப்பட்டு வாய்ஸ் கமெண்ட் மூலமே அனைத்தையும் தேர்வு செய்ய வாய்ப்புகளை வழங்குகிறது. உதாரணமாக நீங்கள் அவசரமாக ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது எவ்வளவு நேரத்தில் செல்கிறீர்கள் என யாருக்காகவது தகவல் சொல்ல நினைத்தால் அதை தானாக கூகுளே கணக்கிட்டு இவ்வளவு நேரத்தில் செல்வீர்கள் என மெசேஜ் அனுப்பி விடும்.
இதற்கான தொழில் நுட்பமும் அப்டேட் செய்யப்படுகிறது. மேலும் செல்போனில் உள்ள ஆப்ஸ்களை இந்த ஆண்ட்ராய்டு ஆட்டோ மூலம் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனருக்கு காரில் செல்லும்போது தனது செல்போனில் உள்ள அனைத்து தகவல்களையும் இன்ஃபோடைமென்ட் ஸ்கிரீனில் பெற முடியும். செல்போனில் உள்ள ஆப்ஸ்களை காரின் ஸ்கிரீனிலேயே பயன்படுத்த முடியும்.
இது மட்டுமல்லாமல் பல்வேறு கனெக்டிவிட்டி அம்சங்களும் அப்டேட் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காரில் நீங்கள் இல்லாத போதே உங்கள் செல்போன் மூலம் உங்கள் காரின் பல்வேறு விஷயங்களை பார்க்கவும் கமெண்ட் செய்யவும் முடியும் வகையில் இது உருவாக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோ வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தற்போது தான் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்த அப்டேட்கள் செய்யப்படுகிறது.
இந்த அப்டேட் செய்யப்பட்ட பின்பு ஆண்ட்ராய்டு பயனாளர்களின் வாழ்க்கை சுலபமாக இருக்கும் வகையில் இது உதவி செய்யும். இது மட்டுமல்லாமல் கூகுள் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சிறப்பான ஆண்ட்ராய்டு ஆட்டோ தளத்தையும் உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கான அப்டேட்டை எல்லாம் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த தொழில்நுட்ப கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இது விரைவில் இந்தியாவிற்கும் வரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்ட்ராய்டு ஆட்டோ தொழில்நுட்பம் என்பது மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனமும் கார்பிளே என்ற தயாரிப்பை வாகனங்களுக்காக வெளியிட்டு வருகிறது. ஆண்ட்ராய்டு ஆட்டோவின் இந்த அப்டேட்டால் ஆப்பிள் நிறுவனமும் தனது கார்பிளே தயாரிப்பில் செயற்கை தொழில்நுட்பத்தை உட்பகுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.