விஜயகாந்த் மறைந்த பிறகு முதன் முதலாக ஏற்றிய கொடி அறுந்து விழுந்ததால் ‘ஷாக்’..பிரேமலதா சொன்ன காரணம்!
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றிய நிலையில், பாதியிலேயே கயிறு அறுந்து கொடி கீழே விழுந்தது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் டிசம்பர் 29ஆம் தேதி மாலை சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறுதி அஞ்சலி நிகழ்வுக்கு, ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் மறைவை தொடர்ந்து, தேமுதிக கட்சிக் கொடி கடந்த ஒரு மாதமாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றுடன் விஜயகாந்த் மரணமடைந்து 1 மாதம் ஆகியுள்ள நிலையில், இன்று முதல், தேமுதிக கொடிகள் முழுமையாக பறக்க விட பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுறுத்தி இருந்தார்.
தேமுதிக கொடி அறுந்து விழுந்தது: அதன்படி, இன்று தேமுதிக கட்சிக் கொடி ஏற்றும் நிகழ்வு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக் கழகத்தில் நடைபெற்றது. தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இன்று முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றினார். இந்நிலையில், கொடி ஏற்றிக் கொண்டிருக்கும்போது பாதியிலேயே அறுந்து கொடி கீழே விழுந்தது.
பூக்கள் வைத்து கட்டப்பட்ட கொடியை, பிரேமலதா விஜயகாந்த் இன்று ஏற்றினார். கொடி மேலே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அறுந்து, கொடி சரிந்து தேமுதிக நிர்வாகி முகத்தின் மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து, மீண்டும் கயிற்றில் கட்டி, கொடியேற்றினார் பிரேமலதா விஜயகாந்த். தொடர்ந்து, கட்சியினர், கட்சிக் கொடிக்கு மரியாதை செலுத்தி முழக்கமிட்டனர். தேமுதிக பொதுச் செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் முதன்முறையாக கட்சிக் கொடி ஏற்றியபோதே கொடி அறுந்து கீழே விழுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
பிரேமலதா பேட்டி: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு தேமுதிக தலைமை கழகத்தில் அரைக்கம்பத்தில் பறந்து கொண்டிருந்த கட்சியின் கொடி தற்போது முழு கம்பத்தில் ஏற்றப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவிற்குப் பிறகு கட்சி கொடியினை ஒரு மாதத்திற்குப் பிறகு முழு கம்பத்தில் ஏற்ற வேண்டும் என முடிவு செய்து இருந்தோம். அதனை இன்று ஏற்றியுள்ளோம்.