‘ராகுல் செய்த பெரிய தவறு’.. ‘இந்தியா’ கூட்டணி உடைய காரணமானது எப்படி? அல்லாடும் காங்கிரஸ்.. பரபர தகவல்
டெல்லி: வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்த்து களமிறங்க எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ கூட்டணி அமைக்கப்பட்டது.
இதில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணிக்கு தாவ உள்ளார். இதனால் ‘இந்தியா’ கூட்டணி உடைந்துள்ள நிலையில் அதற்கு ராகுல் காந்தி முக்கிய காரணமாக இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் சாதனை படைக்கும் முனைப்பில் உள்ளது. ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் கட்சி பாகுபாடுகளை மறந்து 28 கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வாய்ப்பு இல்லை என நினைத்த பாஜக மேலிடத்துக்கு இது பெரிய அதிர்ச்சியை அளித்தது. மேலும் பாட்னா, பெங்களூர், மும்பை, டெல்லியில் தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனை என்பது பாஜகவை கலங்க வைத்தது.
ஆனால் தற்போது பாஜக நிம்மதியடைந்துள்ளது. இதற்கு ‘இந்தியா’ கூட்டணியில் ஏற்பட்டுள்ள பெரிய குழப்பம் தான் காரணம். அதாவது ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் தனது கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்து தான் போட்டியிடும் என அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்படாது எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் பஞ்சாப்பிலும் ஆம்ஆத்மி தனித்து போட்டியிடும் என பகவந்த் மான் கூறியுள்ளார். மாறாக பீகாரில் லாலுவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த நிதிஷ் குமார் தனது முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுடன் கைகோர்த்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் பாஜக ஆட்சியமைப்பதை தடுக்க வேண்டும் என்றால் இந்த 2 மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி என்பது மிகவும் முக்கியம். ஆனால் தற்போது அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது பாஜகவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் தான் ‘இந்தியா’ கூட்டணியின் குழப்பத்துக்கும், கூட்டணி உடைந்ததற்கும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மிகவும் முக்கிய காரணம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.