விண்ணை முட்டும் அரோகரா கோஷம்! பழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! 6 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

தொடர் விடுமுறை காரணமாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலில் சாமி தரசனம் செய்ய குவிந்துள்ளனர்.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இங்கு கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்நிலையில் தைப்பூசத் திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். கடந்த 25ம் தேதி ஏழாம் நாளான அன்று பூச நட்சத்திரத்தில் தைப்பூச திருவிழாவில் அன்று மாலை தைப்பூச தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் காவடிகள் எடுத்தும் அலகு குத்தியும் முருகன் பக்தி பாடலை பாடியும் , கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

இதனால் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக மலைக்கோவிலுக்கு செல்லவும் படிப்பாதை வழியாக கீழே இறங்கவும் ஒருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டு பக்தர்களை சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் போலீசார் போதிய அளவில் இல்லாததால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

மின் இழுவை ரயில், ரோப் கார் நிலையம், இலவச தரிசன வழி, சிறப்பு கட்டண தரிசன வழி என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்துள்ளதால் சுமார் ஆறு மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை தெப்பக்குளத்தில் தெப்ப தேரோட்டம் நடைபெறும் அதனை தொடர்ந்து கொடி இறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *