மீண்டும் இந்தியாவுக்குள் நுழையும் ஃபோர்டு..?

இந்திய பின்புலத்தை சேர்ந்த குமார் கல்ஹோத்ரா என்பவர் ஃபோர்டு நிறுவனத்தின் சிஓஓ அதிகாரியாக பொறுப்பேற்றது முதலே, இந்திய மீள்வருகைக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்து வந்தன. இன்னமும் ஃபோர்டு நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது இந்திய மீள்வருகையை உறுதி செய்யாதபோதும், கார் உற்பத்தி சந்தை சார்ந்த செய்திகள் இதனை முரசறைந்து தெரிவிக்கின்றன.
வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக திடீரென நாட்டை விட்டு ஃபோர்டு நிறுவனம் வெளியேறியதில், இந்தியர்கள் மத்தியில் அதன் நம்பகத்தன்மை சற்றே அடிவாங்கியிருக்கிறது. எனவே அதனை சரி செய்யும் நோக்கில் கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் ஃபோர்டு இரண்டாம் முறையாக இந்தியாவில் நுழையும்.
அந்த வகையில் ஃபோர்டு தனது மீள்வருகையை அதிரடியாக தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பிரபலமான எஸ்யூவி ரகங்களை இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைப்பதில் ஏற்கனவே ஆய்வைத் தொடங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. டொயோட்டாவின் ஃபார்ச்சூனருக்கு போட்டியாக தனது பிரபல எண்டெவர் காரின் உற்பத்தியுடன், இந்திய மீள்வருகையை ஃபோர்டு நிறுவனம் அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.