அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கை தாண்டிய ஜஸ்ப்ரீத் பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் – தனித்துவ சாதனை

இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 32 போட்டிகளில் பங்கேற்று விளையாடி 140 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலும் அவர் பங்கேற்று விளையாடி வருகிறார்.
அந்த வகையில் ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்கி நடைபெற்று வரும் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பாக பந்துவீசிய பும்ரா முதல் இன்னிங்ஸில் இரண்டு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இப்படி அவர் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய 6 விக்கெட்டுகளோடு சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் அவரது இந்த செயல்பாடு டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரை தனித்துவமான சாதனைக்கும் அழைத்துச் சென்றுள்ளது.
அந்த வகையில் இந்திய அணிக்காக முதல் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களாக அஸ்வின் (183) மற்றும் ஜடேஜா (155) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் மூன்றாவது இடத்தில் இருந்த ஹர்பஜன் (144) மற்றும் அணில் கும்ப்ளே (144) ஆகியோரை பின்னுக்கு தள்ளி 3-ஆம் இடத்தினை தற்போது பும்ரா பிடித்துள்ளார்.
அந்தவகையில் தற்போது இந்த பட்டியலில் முதல் 33 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.