மனுசனா இல்லை மெஷினா.. ஒருமுறை கூட அவர் என்சிஏ-வுக்கு சென்றதில்லை.. வியப்பாக சொன்ன ரோகித் சர்மா!
ஐதராபாத் : இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏவுக்கு சென்றதில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுவதாக விராட் கோலி சில நாட்களுக்கு முன் அறிவித்தார். இதுதொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் பிசிசிஐ என்று 3 தரப்பிடமும் விராட் கோலி முன்னதாகவே தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பிசிசிஐ தரப்பில், விராட் கோலி சொந்த காரணங்களுக்காக 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் விராட் கோலி குறித்து ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டது. காயம் அடைந்ததால் ஓய்வில் இருக்கிறாரா அல்லது குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் விராட் கோலி இருக்கிறாரா என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், விராட் கோலியை அருகில் இருந்து பார்ப்பது என் அதிர்ஷ்டம் என்றே சொல்ல முடியும். அவர் எந்த நேரத்தில் அணியுடன் மட்டுமே இருப்பவர். அதேபோல் களத்திற்கு வெளியில் விராட் கோலி என்ன செய்கிறார் என்பது மக்களுக்கு தெரியாது. அவரின் பயிற்சி முறைகள், உழைப்பு எதுவும் தெரியாது.
ஒவ்வொரு கிரிக்கெட் தொடரிலும் விராட் கோலியும் ஆர்வமும், வெல்ல வேண்டும் என்ற பசியும் அதிகரித்து கொண்டே இருக்கும். விராட் கோலி ஒருமுறை கூட என்சிஏ-வுக்கோ அல்லது ஃபிட்னஸ் தொடர்புடைய முகாமிலோ பங்கேற்றதில்லை. இளம் வீரர்கள் விராட் கோலியிடம் இருந்து அதனை கற்று கொள்ள வேண்டும். சொந்த காரணங்கள் தவிர்த்து, வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் விளையாடாமல் இருந்ததில்லை.
ஒருவேளை ஓய்வு தேவையென்றால் அவரை யாரும் தடுக்க போவதில்லை. ஆனால் ஒருபோதும் விராட் கோலி அவ்வாறு ஓய்வை விரும்பும் வீரர் கிடையாது. அவரிடம் இளம் வீரர்கள் மட்டுமல்லாம், நான் உட்பட அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலிக்கு இந்திய அணியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.