Trump: பெண் எழுத்தாளர் பாலியல் வழக்கு… ட்ரம்ப்பே ஷாக்கான அபராத தொகை – எவ்வளவு தெரியுமா?!
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், நீதிமன்றம் அவருக்கு 83.3 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருக்கிறது.
அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 690 கோடி ரூபாய். முன்னதாக, அமெரிக்காவின் பிரபல எழுத்தாளர் இ.ஜீன் கரோல் (E Jean Carroll), 1990-களின் காலகட்டத்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோரில் தன்னைச் சந்தித்த ட்ரம்ப், டிரெஸ்ஸிங் ரூமில் தன்னைத் தள்ளிவிட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின்னர் இந்த விஷயம் வெளியில் சொல்ல ஆரம்பித்ததும் தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாகவும் நீதிகேட்டு நீதிமன்றத்துக்குச் சென்றார்.
இ.ஜீன் கரோல் – டொனால்டு ட்ரம்ப்
பின்னர் வழக்கின் விசாரணையில், கரோலுக்கு 5 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்குமாறு ட்ரம்ப்புக்கு கடந்த மே மாதம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்த வழக்கையே முற்றிலுமாக மறுத்த ட்ரம்ப் வழக்கறிஞர், ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், அதிபர் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடவிருப்பதால் பணத்துக்காக கரோல் இந்த வழக்கு தொடர்ந்திருக்கிறார் என்றும் கூறி, மேல்முறையீட்டுக்குச் செல்வோம் என்று தெரிவித்திருந்தார். மேலும், “என் குழந்தைகள்மீது சத்தியமாக, அவரை நான் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை” என குற்றச்சாட்டுக்கு ட்ரம்ப் மறுப்பும் தெரிவித்தார்.
இந்த நிலையில், நியூயார்க்கிலுள்ள நடுவர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில், ட்ரம்புக்கு 83.3 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்த தீர்ப்பில், கரோல் மீது அவதூறு பரப்பியதற்காகவும், அதனை சரிசெய்வதற்காகவும் மொத்தமாக 18.3 மில்லியன் டாலர் அவருக்கு இழப்பீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்றும், தண்டனைக்குரிய அபராதமாக 65 மில்லியன் டாலர் செலுத்துமாறும் ட்ரம்ப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
டொனால்டு ட்ரம்ப்
தீர்ப்பு வந்ததும், மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்த ட்ரம்ப், “இது முற்றிலும் அபத்தமானது. இதுவரை வந்த இரண்டு தீர்ப்புகளிலும் எனக்கு உடன்பாடில்லை. பைடனின் சூழ்ச்சிக்கு எதிராக மேல்முறையீட்டுக்குச் செல்வேன். இது அமெரிக்கா அல்ல. சட்ட அமைப்பு இங்கு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” எனத் தெரிவித்தார்.
இதுவரை ட்ரம்ப் மீது 22-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.