`விவசாயத்தில் லாபம் பெறுவதற்கு வளங்கள் இருந்தால் மட்டும் போதாது’ பில்லியனர் ஜாக்மா சொல்வது என்ன?
அதிக அளவில் சம்பளம் வாங்கி வந்தவர்கள் கூட ஒருகட்டத்தில் தொழில்நுட்ப வேலையை உதறித் தள்ளிவிட்டு விவசாயம் செய்கிறார்கள்.
ஜெயித்த பின் வரும் வெற்றி சிறிது காலத்திற்கு பின் பலரை விவசாயத்தின் பக்கம் திருப்பியுள்ளது. அந்தவகையில், பிரபல சீனத் தொழிலதிபரான ஜாக் மா விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இ – காமர்ஸ் பிஸினஸில் கலக்கி வரும் சீன நிறுவனமான அலிபாபா 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அலிபாபாவை நிறுவிய 19 பேரில் ஜாக் மாவும் ஒருவர். 29 பில்லியன் சொத்து மதிப்புகளோடு உலகின் சாதனை மனிதராக வலம் வந்தவர்.
2019-ல் அலிபாபாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார், ஜாக் மா. அதன்பிறகு பொது வாழ்விலிருந்து விலகி, தனிப்பட்ட வாழ்வினை வாழத் தொடங்கினார்.
அலிபாபாவைத் தொடங்குவதற்கு முன்னர் அவர் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்தார். தனது வாழ்வின் அடுத்தகட்டம் நோக்கி நகர ஆரம்பித்தவர், 2020-ல் இருந்து விவசாயம் குறித்து உலகம் முழுவதுமுள்ள பல கல்வி நிறுவனங்களில் பயின்றார்.
ஸ்பெயின், நெதர்லாந்து, ஜப்பான் மற்றும் தாய்லாந்தில் அக்ரோ டெக் (Agro Tech) படித்தார். 2023 நவம்பரில் `ஹாங்ஜோ மாஸ் கிச்சன் ஃபுட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். விவசாயப் பொருள்களை பதப்படுத்துவது மற்றும் சில்லறை விற்பனை செய்வதில் நிறுவனம் ஈடுபட்டது. விவசாயத்திற்கு ஏன் செல்கிறார் என்பது குறித்து அவர் பகிரங்கமாக பேசவில்லை.
ஆனால், ஆகஸ்ட் 2023-ல் கிராமப்புற ஆசிரியர்களுக்கு ஒரு வீடியோவில் பேசியிருந்த ஜாக் மா, “விவசாயத்துறையில் வெற்றி பெறுவதற்கு அதிக வளங்கள் தேவையில்லை; ஆனால், தனித்துவமான சிந்தனை திறனும் கற்பனையும் உள்ளவர்களால் அதில் வெற்றிபெற முடியும் என்பதை நான் கண்டுபிடித்தேன்.
கிராமப்புறங்களுக்கு தொழில்நுட்பங்கள் அதிகம் தேவை. அதே நேரத்தில் மற்றத் துறைகளைப் போலவே விவசாயத்தில் வளர்வதற்கு தனித்துவமான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.