பாகிஸ்தானுடன் மோதலுக்கு இடையே 3 செயற்கைகோள்களை ஏவிய ஈரான்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவி ஈரான் சாதனை படைத்துள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாகிப் பகுதியில் ஜெய்ஷ் அல் அடல் போராளி குழுக்களின் தளங்கள் மீது ஈரான் கடந்த 17ம் தேதி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக ஈரானின் சப்பார், தென்மேற்கு ஈரானில் சிஸ்தான், பலுசிஸ்தான் பகுதிகளில் பாகிஸ்தான் போர் விமானங்கள் கடந்த 18ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தின.

இதனால் பதற்றமான சூழல் நிலவும் நிலையில் நேற்று ஈரான் பாதுகாப்பு அமைச்சகத்தின் சொந்த தயாரிப்பான சிமோர்க் ராக்கெட் மூலம் 3 செயற்கைகோள்களை ஏவியுள்ளது. ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள இமாம் கொமெய்னி விண்வௌி ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து மஹ்தா, கய்ஹான்-2 மற்றும் ஹடேஃப்-1 என்று பெயரிடப்பட்ட 3 செயற்கைகோள்கள் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டன.

இதுகுறித்து ஈரான் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் இசா சரேபூர் கூறியதாவது, “மஹதா புவிசார் ஆராய்ச்சிகளில் ஈடுபடும். கய்ஹான்-2 ஹடேஃப்-1 செயற்கைகோள்கள் தகவல் தொடர்பு துறையில் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்தார். ஈரானின் செயற்கைகோள் சோதனைகள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தை மீறிய செயல் என அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. மேலும் அணுஆயுத சக்தி கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை முயற்சிகளை ஈரான் மேற்கொள்ளக் கூடாது எனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *